×

கல்குவாரியில் மண் சரிந்து 2 தொழிலாளர்கள் பலி

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மதூர், சிறுதாமூர் மற்றும் சுற்றியுள்ள மலை பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரிகள் செயல்படுகின்றன. இங்கு சக்தி வாய்ந்த வெடி பொருட்களை பயன்படுத்துவதால், சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, மக்கள் அச்சத்துடனே வசித்து வருகின்றனர்.மேலும், கல்குவாரிகளில் இருந்து வெளியேறும் தூசியால் காற்று மாசடைந்து பொதுமக்களுக்கு சுவாச கோளாறு ஏற்படுகிறது. இந்நிலையில், சிறுதாமூர் கிராமத்தில் இயங்கும் தனியார் கல்குவாரியில் நேற்று முன்தினம் இரவு கற்களை பெயர்த்தெடுக்கும் பணிக்காக பொக்லைன் இயந்திரங்கள் சுமார் 300 அடி ஆழ பள்ளத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அப்போது பள்ளத்துக்கு அருகில் மலையில் இருந்து திடீரென மண்சரிவு ஏற்பட்டதால், பொக்லைன் இயந்திரம் மண்ணில் புதைந்தது.

பொக்லைனில் இருந்த வடமாநிலத்தை சேர்ந்த ஷேர்க்கான் அன்சாரி (35), சுனில்குமார் (40) என்ற 2 தொழிலாளர்கள் மண் சரிவில் சிக்கினர். இதுபற்றி அங்கிருந்தவர்கள் சாலவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற அவர்கள், உத்திரமேரூர் தீயணைப்பு மீட்பு படையினர் உதவியுடன் 4 பொக்லைன் இயந்திரம் கொண்டு, மண்ணில் புதைந்த இருவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று மதியம் 3 மணியளவில் மண்சரிவு இடிபாடுகளில் இருந்து சுனில்குமார், சடலமாக மீட்கப்பட்டார். போலீசார், சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து, ஷேர்கான் அன்சாரி சடலத்தை தேடி வருகின்றனர்.

Tags : Kalkuvari , Landslide in Kalkuvari kills 2 workers
× RELATED கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க...