×

வயிற்றில் கத்திரிக்கோல் வைத்து தைத்த விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: பிரசவத்துக்கு சேர்ந்த பெண்ணின் வயிற்றில் கத்திரிக்கோல் வைத்து தைத்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார பணிகள் துறை இயக்குனருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகில் உள்ள வி.கே.ஆர்.புரம் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன காவலாளி பாலாஜி. இவரது மனைவி குபேந்திரி, அதே பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரசவத்திற்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு ஆண் பிறந்தது. அதன் பின் அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த போது அவரது வயிற்றில் கத்திரிக்கோல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு பின், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் கத்திரிகோல் அகற்றப்பட்டது.

இதையடுத்து மனைவியின் வயிற்றில் கத்திரிகோலை வைத்து தைத்து அஜாக்கிரதையாக செயல்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாலாஜி, முதல்வரின் தனிப்பிரிவுக்கு மின்னஞ்சலில் புகார் அனுப்பியிருந்தார். இதுசம்பந்தமாக  நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை.ஜெயச்சந்திரன், இதுசம்பந்தமாக 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார பணிகள் துறை இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளார்.



Tags : Human Rights Commission , Stitches in the abdomen: Report to be filed: Human Rights Commission order
× RELATED தேர்தலில் இஸ்லாமியர்களுக்கு எதிராக...