×

முன்னுரிமை மற்றும் அந்தியோதயா குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் கூடுதலாக 5 கிலோ அரிசி: அரசு அறிவிப்பு

சென்னை: முன்னுரிமை மற்றும் அந்தியோதயா குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் 2.09 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.  அதில் 18.64 லட்சம் அந்தியோதயா அன்ன யோஜனா பிரிவுக்கு மாதம்தோறும் அதிகபட்சம் 35 கிலோவும், 93 லட்சம் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு தலா 5 கிலோவும், எஞ்சிய முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ விலையில்லா அரிசியும் வழங்கப்படுகின்றன. அரிசி குடும்ப அட்டைதாரர்கள் தேவைக்கு ஏற்ப, புழுங்கல் அரிசி, பச்சரிசி என வாங்கி கொள்ளலாம்.  கொரோனா பரவலின் இரண்டாம் அலையால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மே மற்றும் ஜூன் மாதங்களில், முன்னுரிமை மற்றும் அந்தியோதயா குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஏற்கனவே வழங்கப்படும் உரிம அளவுடன் நபர் ஒருவருக்கு கூடுதலாக தலா 5 கிலோ தானியங்களை விலையில்லாமல் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்காக, மத்திய தொகுப்பில் இருந்து, தமிழகத்திற்கு கூடுதலாக அரிசி ஒதுக்கப்பட்டுள்ளது.  தமிழக அரசு, அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமின்றி, முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களையும் சேர்த்து கூடுதல் அரிசி வழங்கி வருகிறது. உதராணமாக, 2 பேர் உள்ள குடும்பத்திற்கு 20 கிலோ, 3 பேர் உள்ள குடும்பத்திற்கு 30 கிலோ என்ற அடிப்படையில் ஏற்கனவே வழங்கப்படும் உரிம அளவுடன் சேர்த்து, இரு மடங்கு அரிசி கிடைக்கும்.  மே மாதம் வழங்க வேண்டிய இந்த கூடுதல் அரிசி விநியோகம் அடுத்த மாதம் (ஜூலை, 2021) சேர்த்து வழங்கப்படும்.எனவே, மத்திய அரசின் கூடுதல் அரிசியும் சேர்த்து, அரிசி குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களுக்கு ஏற்ப, ஜூன் மாதத்தில் மொத்தமாக விநியோகிக்கப்படும் அரிசி விவரங்கள் நியாயவிலைக் கடைகளில் உள்ள விளம்பரப் பலகைகளில் விளம்பரப்படுத்தப்படும்.



Tags : Anthiyodaya , 5 kg of rice in ration shops for priority and Anthiyodaya family cardholders: Government announcement
× RELATED அந்தியோதயா திட்டத்தில் இருந்து 7610 குடும்ப அட்டைகள் நீக்கம்