×

ஆரம்பத்தில் ஓ.பி.எஸ்.சின் தீவிர ஆதரவாளராக இருந்த கே.பி.முனுசாமியை வெறுக்கும் அதிமுக தொண்டர்கள்: கொறடா பதவியை குறிவைப்பதாக குற்றச்சாட்டு

சென்னை: 2016ம் ஆண்டு, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்தது. அப்போது, ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தியதால் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். அமைச்சரவையிலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. அதிமுகவில் இருந்தாலும், ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டார். அப்போது எம்எல்ஏ தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த கே.பி.முனுசாமி ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டார். தினசரி ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு சென்று ஆலோசனை நடத்துவது, சசிகலாவுக்கு எதிராகவும், எடப்பாடி ஆட்சிக்கு எதிராகவும் பேட்டி அளிப்பது என அனைத்து பணிகளையும் கே.பி.முனுசாமிதான் நிருபர்களிடம் தெரிவிப்பார். அந்தளவுக்கு, ஓ.பன்னீர்செல்வத்தின் நிழல் போன்று கே.பி.முனுசாமி செயல்பட்டார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை அதிமுகவில் இருந்து ஓரம் கட்டினார். அதன்பிறகு, ஓ.பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில், துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்தின் நெருங்கிய கூட்டாளி கே.பி.முனுசாமிக்கு, அதிமுக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்ததால், அதிமுக கட்சியிலும் அவரது செல்வாக்கு உயர தொடங்கியது. அனைத்து அமைச்சர்கள், பெரும்பாலான அதிமுக மாவட்ட செயலாளர்கள் எடப்பாடியை ஆதரிக்க தொடங்கினர். இதை கவனித்த கே.பி.முனுசாமி, இனியும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்தால் அதிமுக கட்சியில் தனக்கு மரியாதை மற்றும் பதவி கிடைக்காது என்று நினைத்து எடப்பாடி பழனிசாமியை தீவிரமாக ஆதரிக்க தொடங்கினார்.  இதற்கு பரிசாக, அதிமுக மாநிலங்களவை எம்பி பதவி கே.பி.முனுசாமிக்கு கிடைத்தது. இதற்கு விசுவாசமாக செயல்பட்ட கே.பி.முனுசாமி, அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியா, ஓ.பன்னீர்செல்வமா என்ற நிலை வரும்போது, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தார். இதன்மூலம் ஓபிஎஸ் அணியில் இருந்து முழுவதுமாக விலகி, எடப்பாடி அணிக்கு கே.பி.முனுசாமி தாவி விட்டார். இப்படி, மாறி மாறி தனது நிலையை கே.பி.முனுசாமி மாற்றிக் கொண்டதால் ஒரு கட்டத்தில் கே.பி.முனுசாமியை அதிமுக தொண்டர்கள் வெறுக்க தொடங்கினார்கள்.

இந்நிலையில்தான், கடந்த ஏப்ரல் மாதம் தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் நடந்தது. இதில் கே.பி.முனுசாமி வேப்பனஹள்ளி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டார். எம்பி பதவியை அனுபவித்து வரும் இவர், ஏன் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும் அதிமுக நிர்வாகிகள் கேள்வி எழுப்பினர். அதிமுக எப்படியாவது ஆட்சிக்கு வரும், அமைச்சர் ஆகி விடலாம் என்று கே.பி.முனுசாமி கனவு கண்டார். ஆனால் அவரது கனவு நிறைவேறவில்லை. இதற்கும் ஒரு உள்நோக்கம் உள்ளது என்று அதிமுக தொண்டர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அதிமுக தற்போது எதிர்க்கட்சியாக உள்ளது. எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர் மற்றும் கொறடா யார் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. அநேகமாக ஓ.பன்னீர்செல்வம் எதிர்க்கட்சி துணை தலைவராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதனால், கொறடா பதவியை கே.பி.முனுசாமி பெற, எடப்பாடி பழனிசாமிக்கு தனது முழு ஆதரவை தற்போது தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே, சசிகலாவை எதிர்த்து தற்போது கே.பி.முனுசாமி பேட்டி அளித்து வருகிறார். இப்படி பேசி எடப்பாடியின் தீவிர ஆதரவாளராக கே.பி.முனுசாமி, தன்னை காட்டிக் கொள்ள முயற்சி செய்வது, அதிமுக சட்டசபை கொறடா பதவியை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்பதால்தான் என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கியபோது அவருக்கு முழு துணையாக நின்ற கே.பி.முனுசாமி, இன்று பதவிக்காக ஏதேதோ பேச தொடங்கி விட்டதால், அதிமுக தொண்டர்கள் இவர் மீது கடும் கோபத்தில் உள்ளனர். அதிமுகவில் தன்னை பெரிய தலைவராக காட்டிக் கொள்கிறார்.


Tags : AIADMK ,KP Munuswamy ,OPP ,Korata , AIADMK volunteers hate KP Munuswamy, who was initially a staunch supporter of the OPP: Accused of targeting Korata post
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...