கொரோனா பரவல் எதிரொலி: காரைக்குடியில் களையிழந்த சுற்றுலாத்தலங்கள்

காரைக்குடி: கொரோனா எதிரொலி காரணமாக காரைக்குடி சுற்றுலா தலங்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக வெறிச்சோடி காணப்படுகின்றன. சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை காரைக்குடி அருகே கானாடுகாத்தான் செட்டிநாடு பராம்பரிய பங்களாக்கள், ஆத்தங்குடி, குன்றக்குடி, பிள்ளையார்பட்டி, வைரவன்பட்டி, திருப்புத்தூர், சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி, காளையார்கோவில், தேவகோட்டை, திருமலை, பிரான்மலை என 30க்கும் மேற்பட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. இவற்றை பார்வையிட ஆண்டுதோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருவர்.

குறிப்பாக, செட்டிநாடு பாரம்பரிய பங்களாக்களை பார்வையிட ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்கா, ஜெர்மன் ஆகிய நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு பயணிகள் அதிகளவில் வருவது வழக்கம். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டப்படும். நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்றுவந்தனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த 15 மாதங்களாக சுற்றுலா பயணிகள் வரவில்லை. இதனால் சுற்றுலா தளங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனை நம்பி இருந்த தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர். சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், ‘‘காரைக்குடியை பொறுத்தவரை ஆண்டுக்கு 2,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணிகள் வருவார்கள்.

வெளிநாட்டு பயணிகளை பொறுத்தவரை இங்குள்ள கலாச்சாரம், கட்டிடக்கலை போன்றவற்றை தெரிந்துகொள்ள வருவார்கள். கொரோனா பரவலால் வெளிநாட்டு பயணிகள் வருகை முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் பல கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது’’என்றனர்.

Related Stories:

More