தடுப்பூசி போட்டுக் கொண்ட முலாயம் சிங்; மகனின் வதந்தியை உடைத்த தந்தை!.. சமூக ஊடகத்தில் கிண்டலுக்கு ஆளான அகிலேஷ்

குர்கிராம்: உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ், தடுப்பூசி குறித்து சர்ச்சை கருத்து கூறிய நிலையில், அவரது தந்தை முலாயம் சிங் தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டார். இது, சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ், குர்கிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டார். ஆனால், அவரது மகனான முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கடந்த பிப்ரவரி மாதம் வாக்கில்,  ‘பாஜகவின் தடுப்பூசியை போட்டுக் கொள்ளமாட்டேன்’ என்று கருத்து தெரிவித்திருந்தார்.

பின்னர், சிறிது நேரத்தில் அந்த கருத்தை  அகிலேஷ் யாதவ் வாபஸ் பெற்றார். மேலும் ‘முழுமையான பரிசோதனைக்குப் பிறகே நான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வேன்’ என்று கூறினார். தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்ட போது, ‘பாஜக அரசு, அனைத்து மக்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போட வேண்டும்’ என்று அகிலேஷ் கருத்து தெரிவித்தார். இந்த நிலையில், அவரது தந்தை முலாயம் சிங் யாதவ் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இப்போது, ​பாஜக தலைவர்கள் மட்டுமின்றி பலரும் அகிலேஷை கேலி செய்து வருகின்றனர்.

அதில், ‘சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவுக்கு ‘பாஜக’வின் தடுப்பூசி எப்படி கிடைத்தது? முலாயம் சிங் யாதவ் பாஜகவுக்காக பிரசாரம் செய்கிறாரா? அல்லது அவரது மகன் பரப்பிய வதந்தியை உடைக்கிறாரா?’ என்று கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து, மாநில அமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா கூறுகையில், ‘முலாயம் சிங் யாதவ் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கு நன்றி. தடுப்பூசி குறித்து அவரது மகன் வதந்தியை  பரப்பினார். ஆனால் நீங்கள் தடுப்பூசியை போட்டுக் கொண்டீர்கள். இந்த விஷயத்தில் அகிலேஷ் யாதவ் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றார்.

Related Stories:

>