மீரட்: மீரட்டில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த சில மணி நேரத்தில் வேட்பாளரின் கணவர், முன்னாள் தலைவரின் மகன் மற்றும் அவனது ஆதரவாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம் மீரட் அடுத்த ராஜ்புரா பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்காக ராகுல் ஜாதவ் (27) என்பவர், தனது மனைவி காஜலை அழைத்துக் கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு, உறுப்பினர் பதவிக்காக காஜல் வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்பின், தம்பதியர் வீடு திரும்பினர். அடுத்த சில மணி நேரத்தில் ராஜ்புரா பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர் யோகேந்திர ஜாதவின் மகன் அங்கித் மற்றும் போட்டி வேட்பாளர் அருண் ஆகியோர், தங்கள் ஆதரவாளர்களுடன் ராகுல் ஜாதவின் வீட்டிற்கு வந்தனர்.
அவர்கள், காஜல் தாக்கல் செய்த வேட்புமனுவை வாபஸ் பெறுமாறு அழுத்தம் கொடுத்தனர். இதனால் ஏற்பட்ட தகராறில், இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அங்கித்தின் ஆதரவாளர்களால் ராகுல் ஜாதவ் சுட்டுக் கொல்லப்பட்டார். ரத்த வெள்ளத்தில் ராகுல் ஜாதவ் சரிந்த நிலையில், ராகுலின் தந்தை ஜெய்பால் மற்றும் மற்றொருவரை அந்த கும்பல் பலமாக தாக்கிவிட்டு தப்பித்தது. மேற்கண்ட சம்பவத்தை அக்கம்பக்கத்தில் இருந்த சிலர் செல்போனில் பதிவு செய்தனர். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராகுல் ஜாதவின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். தேர்தல் முன்விரோதம் தொடர்பான இந்த கொலை சம்பவம் தொடர்பாக, ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரதான குற்றவாளியான முன்னாள் தலைவரின் மகன் அங்கித் கைது செய்யப்பட்டதாக மீரட் போலீஸ் எஸ்பி கேசவ் குமார் தெரிவித்தார்.