பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் நடால், ஸ்வைடெக்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் காலிறுதிக்கு நடப்பு சாம்பியன்கள் ரஃபேல் நடால் மற்றும் இகா ஸ்வைடெக் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 4ம் சுற்றுப்போட்டியில் ஸ்பெயின் நட்சத்திரம் ரஃபேல் நடாலும், இத்தாலியின் இளம் வீரர் ஜானிக் சின்னரும் (19) மோதினர். தரவரிசையில் தற்போது நடால் 3ம் இடத்திலும், சின்னர் 19வது இடத்திலும் உள்ளனர். முதல் செட்டில் மட்டும் சின்னர், நன்கு ஆடினார். இருப்பினும் அந்த செட்டை 7-5 என நடால் கைப்பற்றினார். 2வது செட்டில் நடாலின் நிதானமான அணுகுமுறை, நல்ல பலனை கொடுத்தது.

அந்த செட்டும் 6-3 என்ற கணக்கில் நடாலின் வசமானது. 3வது செட்டில் சின்னர் மொத்தமாக சரணடைந்துவிட்டார். அந்த செட்டை அதிரடியாக 6-0 என கைப்பற்றி, நடால் காலிறுதிக்கு தகுதி பெற்றார். காலிறுதியில் அவர் அர்ஜென்டினா வீரர் டீகோ ஸ்வார்ட்ஸ்மானுடன் மோதவுள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 4ம் சுற்று போட்டியில் நடப்பு சாம்பியன் போலந்து வீராங்கனை இகா ஸ்வைடெக்கும்(20), உக்ரைன் வீராங்கனை மார்ட்டா கோஸ்ட்யுக்கும்(18) மோதினர். தரவரிசையில் ஸ்வைடெக் 9ம் இடத்திலும், மார்ட்டா 77ம் இடத்திலும் உள்ளனர். போட்டி துவங்கியது முதலே ஸ்வைடெக் ஆதிக்கம் செலுத்தினார்.

பதற்றமே இல்லாமல் ஆடிய அவர் 6-3, 6-4 என நேர் செட்களில் மார்ட்டாவை வீழ்த்தினார். காலிறுதியில் ஸ்வைடெக், கிரீஸ் வீராங்கனை மரியா சக்கரியை எதிர்கொள்கிறார். ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள செர்பிய வீரர் ஜோகோவிச், 4ம் சுற்றில் இத்தாலியின் இளம் வீரர் லொரென்சோ முசெட்டியுடன் (19) மோதினார். முதல் 2 செட்களை டைபிரேக்கரில் 7-6, 7-6 என கைப்பற்றி முசெட்டி அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் அடுத்த 2 செட்களை 6-1, 6-0 என ஜோகோவிச் கைப்பற்றினார். 4வது செட்டில் 0-4 என பின்தங்கியிருந்த முசெட்டி, காயம் காரணமாக விலகிக் கொள்வதாக அறிவித்தார்.

இதையடுத்து ஜோகோவிச் காலிறுதிக்கு தகுதி பெற்றார். காலிறுதியில் அவர் இத்தாலியின் மேட்டியோ பெரட்டினியுடன் மோதவுள்ளார். மகளிர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப், செக். குடியரசின் பார்போரா கிரஜ்சிகோவா ஆகியோரும் 4ம் சுற்றில் வென்று, காலிறுதிக்குள் நுழைந்துள்ளனர்.

Related Stories:

More