×

மின்னல் தாக்கி 26 பேர் பலி: மேற்குவங்கத்தில் சோகம்

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் நேற்று மாலை முதல் இரவு வரை இடிமின்னலுடன் மழை பெய்த போது, மின்னல் தாக்கியதில் மட்டும் 26 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் நேற்று மாலை முதல் இரவு வரை முர்ஷிதாபாத்,  ஹூக்லி, பூர்பா மெடினிபூர் மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் இடி  மின்னலுடன் மழை பெய்தது. மேற்கண்ட 3 மாவட்டங்களில் இடி மின்னல் தாக்கியதில் 26 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றிரவு முதல் பல்வேறு இடங்களில் மின் தாக்கி இறந்தவர்களின் கணக்கீட்டை மாநில பேரிடர் குழு கணக்கிட்டு வருகிறது. மின்னல்தாக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை மேற்கொள்ள முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், இன்று இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) வெளியிட்ட  அறிக்கையின்படி, நேற்று மாலை 4.25 மணியளவில் வடமேற்கு திசையில் இருந்து 59  கி.மீ வேகத்தில் அதிக வேகத்துடன் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்  பெய்த மழை பெய்தது. அந்த இடி மின்னல் காற்றின் வேகம் இரண்டு நிமிடங்கள்  நீதித்து அலிபூர் பகுதியை கடந்தது. இன்று (செவ்வாய்) கொல்கத்தா மற்றும்  சுற்றுப்புறங்களில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். அதேநேரம் சில  இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்’ என்று வானிலை  அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேரிடரம் மேலாண் குழு அதிகாரிகள் கூறுகையில், ‘மேற்குவங்கத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் பெய்த மழையில், மின்னல் தாக்கியதில் 26 பேர் பலியாகி உள்ளனர்.

50க்கும் மேற்பட்டோர் அதிர்ச்சியில் மயக்கமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்தனர். மின்னல் தாக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து, தலா ரூ. 2 லட்சம்,  காயமடைந்தவர்களுக்கு ரூ .50,000 வழங்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. அதேநேரம், பிரதமர் மோடி மின்னல் தாக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tags : West Bengal , Lightning strikes and kills 26: Tragedy in West Bengal
× RELATED கடும் வெப்ப அலை: மேற்கு வங்க பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை