×

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் கால் இறுதியில் ஜோகோவிச்; கோகோ காப் முன்னேற்றம்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டித் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட, நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) தகுதி பெற்றார். நான்காவது சுற்றுல் இத்தாலியின் 19 வயது இளம் வீரர் லொரன்சோ முசெட்டியுடன் (76வது ரேங்க்) நேற்று மோதிய ஜோகோவிச் (34 வயது), டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த முதல் செட்டில் 6-7 (7-9) என தோற்று பின்தங்கினார். கடும் போராட்டமாக அமைந்த 2வது செட்டையும் 6-7 (2-7) என டை பிரேக்கரில் இழந்த ஜோகோவிச் நெருக்கடியில் சிக்கினார். எனினும், தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி முசெட்டியை திணறடித்த அவர் 6-1, 6-0 என அடுத்த 2 செட்களையும் கைப்பற்றி பதிலடி கொடுக்க 2-2 செட் என சமநிலை ஏற்பட்டது. காயம் காரணமாக தடுமாறிய முசெட்டி 5வது மற்றும் கடைசி செட்டில் 0-4 என பின்தங்கிய நிலையில், போட்டியில் இருந்து விலகினார்.

இதைத் தொடர்ந்து, ஜோகோவிச் கால் இறுதிக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 3 மணி, 27 நிமிடத்துக்கு நடந்தது. மற்றொரு 4வது சுற்றில் அர்ஜென்டினாவின் டீகோ ஷ்வார்ட்ஸ்மேன் (10வது ரேங்க்) 7-6 (11-9), 6-4, 7-5 என்ற நேர் செட்களில் ஜெர்மனி வீரர் லெனார்டு ஸ்டிரப்பை (42 வது ரேங்க்) வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார். மகளிர் ஒற்ரையர் பிரிவு 4வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப் (17 வயது, 24வது ரேங்க்) 6-3, 6-1 என்ற நேர் செட்களில் துனிசியாவின் ஆன்ஸ் ஜாபியரை வீழ்த்தி, முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் தொடரின் கால் இறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 53 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது.
அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் தனது 4வது சுற்றில் 2-6, 0-6 என நேர் செட்களில் செக் குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவாவிடம் தோற்று வெளியேறினார்.

* பெடரர் விலகல்
சாதனை வீரர் ரோஜர் பெடரர் (சுவிஸ்) 4வது சுற்றுக்கு முன்னேறி இருந்த நிலையில், முழங்கால் மூட்டு காயத்துக்கு 2 முறை அறுவைசிகிச்சை செய்துகொண்டுள்ளதால் தொடர்ந்து விளையாடி ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்று கூறி போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். இதனால், அவருடன் மோதவிருந்த இத்தாலி வீரர் பெரட்டினி கால் இறுதிக்கு முன்னேறினார்.

* செரீனா ஏமாற்றம்
அமெரிக்க நட்சத்திரம் செரீனா (7வது ரேங்க்) நேற்று முன்தினம் இரவு நடந்த 4வது சுற்றில் 3-6, 5-7 என நேர் செட்களில் எலனா ரைபாகினாவிடம் (கஜகஸ்தான்) தோல்வியைத் தழுவினார். ஆண்கள் இரட்டையர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - பிராங்கோ ஸ்குகோர் (குரோஷியா) ஜோடி 5-7, 3-6 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் அந்துஜார் - மார்டினஸ் இணையிடம் தோற்று வெளியேறியது.

Tags : Djokovic ,French Open ,Cocoa Cop Progress , Djokovic at the French Open tennis quarterfinals; Cocoa Cop Progress
× RELATED பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் ஜோகோவிச்சை வீழ்த்திய சென்னை ஓபன் ரன்னர்!