×

மேட்டூர் அணையிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் 12ம் தேதி தண்ணீர் திறக்கிறார்

சேலம்: சேலத்திற்கு 12ம் தேதி வருகை தரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைக்கிறார். சேலம் மாவட்டம் மேட்டூர் அணை தண்ணீர் மூலம், 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி வரும் 12ம் தேதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கிறார். இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் கூறுகையில், ‘‘வரும் 12ம் தேதி காலை, சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வருகிறார்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் இரும்பாலைக்கு வந்து, கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகளை கொண்ட தற்காலிக சிகிச்சை மையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கிறார். தொடர்ந்து மேட்டூருக்கு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், குறுவை சாகுபடிக்காக தண்ணீரை திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்கின்றனர். பின்னர், டெல்டா மாவட்டங்களுக்கு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், கடைமடை வரை நீர் செல்லும் வகையில், நீர்வழிப் பாதைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிடுகிறார்,’’ என்றனர்.

Tags : Chief Minister ,MK Stalin ,Mettur dam , Chief Minister MK Stalin opens water from Mettur dam on the 12th
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...