அரசு போக்குவரத்து கழகங்கள், நிறுவனங்களில் பணியாற்றும் 1.20 லட்சம் பணியாளர்கள் சார்பில் ரூ.14.47 கோடி கொரோனா நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் 1.20 லட்சம் பணியாளர்கள் சார்பில் கொரோனா நிவாரண நிதியாக 14 கோடியே 46 லட்சத்து 70 ஆயிரத்து 635 ரூபாய்க்கான காசோலை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவலை குறைக்கின்ற வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் பயனாக, தற்பொழுது நோய் தொற்று வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு தொடர் நடவடிக்கைகளுக்கு உதவுகின்ற வகையில், இயன்ற அளவிலான நிதி உதவியினை ”முதலமைச்சரின் பொது நிவாரண நிதி”க்கு வழங்கிடுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

அவரின் வேண்டுகோளை ஏற்று, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அரசு சார்ந்த தன்னாட்சி நிறுவனங்களில் பணியாற்றி வருகின்ற அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சார்ந்துள்ள துறைகளின் சார்பில், ஒரு நாள் ஊதியமானது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு அரசு அனைத்து போக்குவரத்து கழகங்கள், சாலை போக்குவரத்து நிறுவனம், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரை பணிக்குழு உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றுகின்ற, ஏறத்தாழ 1.20 லட்சம் பணியாளர்களின் ஒரு நாள் ஊதியமாக, 14 கோடியே 46 லட்சத்து 70 ஆயிரத்து 635 ரூபாய்க்கான காசோலையினை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று தலைமை செயலகத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வழங்கினார். அப்போது, போக்குவரத்து துறை கூடுதல் தலைமை செயலாளர் தயானந்த் கட்டாரியா மற்றும் போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories:

>