×

ஆலை அமைத்து போலி பெட்ரோல், டீசல் தயாரித்து விற்பனை: வேலூர் அருகே துணிகரம்

கே.வி.குப்பம்: வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த லத்தேரி வேலம்பட்டு கேட் பகுதியில் கருணாகரன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்புகளுக்கு நடுவே ஒதுக்குப்புறமாக கட்டிடம் ஒன்று உள்ளது. இதனை, திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த தனியார் போர்வெல் நடத்துபவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அந்த இடத்தில் அவர்கள் போலி பெட்ரோல், டீசல் தயாரிப்பதாகவும், தமிழகம், கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கும் வாகனங்களுக்கும், லோக்கல் வாகனங்களுக்கும் போலி டீசலை சப்ளை செய்வதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து லத்தேரி பெட்ரோல் பங்க் உரிமையாளரும் வேலூர் மாவட்ட பெட்ரோலிய வணிகர் சங்க செயலாளருமான சந்திரசேகரன், சங்க நிர்வாகிகளுடன் நேற்று முன்தினம் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார்.

அப்போது, அங்குள்ள கட்டிடத்தில் பெட்ரோல் தயாரிப்பின்போது மீதமாகும் கழிவு பொருட்களை வைத்து சில வேதியியல் பொருட்களை சேர்த்து போலியாக டீசல் போன்று தயாரித்து சட்டவிரோதமாக விற்பனை செய்வது தெரியவந்தது. மேலும், அங்கு பெட்ரோல் மற்றும் டீசல் தயாரிக்க பயன்படும் ரசாயனம் மற்றும் இயந்திரங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து லத்தேரி போலீசாருக்கு வணிகர் சங்க நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பதுக்கி வைக்கப்பட்டிருந்த போலி பெட்ரோல் பேரல்கள், 2 டேங்கர் லாரிகள், போலி பெட்ரோல், டீசல் தயாரிக்க பயன்படும் இயந்திரங்கள், ரசாயனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து வேலூர் மாவட்ட பெட்ரோலிய வணிகர் சங்க தலைவர் அருணோதயம் கூறுகையில், ‘வேலூர் மாவட்டத்தில் பயோ டீசல் மிக்ஸ்டு மினரல் ஆயில் என்ற பெயரில் தரமற்ற டீசல் விநியோகிக்கப்படுவதாக அவ்வப்போது வரும் தகவலின்பேரில் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கிறோம். லத்தேரி அடுத்த வேலம்பட்டு கேட் பகுதியில் டீசல் தயாரிப்பின் போது ஏற்படும் கழிவினை கொண்டுவந்து சில ரசாயனங்களை சேர்த்து போலியாக டீசலை தயாரிக்கின்றனர். இதை பயன்படுத்தினால் வாகன உதிரி பாகங்கள் பழுதாகும், உடனடியாக தீப்பிடிக்கும். இதுகுறித்து காட்பாடி டிஎஸ்பி ரவிச்சந்திரன், லத்தேரி இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோரிடம் புகார் அளித்துள்ளோம்’ என்றார். இதுகுறித்து டிஎஸ்பி ரவிச்சந்திரன் கூறுகையில், ‘கைப்பற்றப்பட்ட எரிபொருள் ‘மிக்ஸ்டு மினரல் ஹைட்ரோ கார்பன்’ ஆகும். அதை பயன்படுத்த எந்த வகையான பாதுகாப்புகளை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இருதரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்’என்றார்.

Tags : Valur , Production and sale of counterfeit petrol and diesel at the plant: Venture near Vellore
× RELATED வேலூர் அண்ணாசாலையில் ஆக்கிரமிப்புகள்...