×

பெருகும் ஆர்வம்..குறையும் தடுப்பூசி!: தமிழகத்தின் பல இடங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு..ஏமாற்றத்துடன் திரும்பும் மக்கள்..!!

சிவகங்கை: தமிழ்நாட்டின் பல இடங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஊசி போட சென்ற பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மக்களிடையே ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு காரணமாக தடுப்பூசி போடுவதற்கு கூட்டம் அதிகரித்துள்ளது. பொதுமக்கள் தடுப்பூசி மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஊசி போட்டு செல்கின்றனர். இந்நிலையில், விராலிமலையில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வத்துடன் முன்வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது. 


இதேபோன்று சிவகங்கையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தும் தடுப்பூசி கிடைக்காததால் பொதுமக்கள் விரக்தி அடைந்தனர். இதேபோன்று கும்பகோணம் மற்றும் கரூரிலும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்பதிவு செய்தவர்கள், குறிப்பிட்ட தேதியில் மருத்துவமனைக்கு சென்றும் தடுப்பூசி மருந்து இல்லை என்று மருத்துவ நிர்வாகம் திருப்பி அனுப்பியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். 


தமிழ்நாட்டிற்கு தேவையான தடுப்பூசியை ஒன்றிய அரசு முறையாக ஒதுக்கீடு செய்யாததே தட்டுப்பாட்டிற்கு காரணமாகும். பொதுமக்கள் தடுப்பூசி செலுத்துக்கொள்ள ஆர்வமாக இருக்கும் சூழலில் மாநிலத்திற்கு தேவையான மருந்தை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாகும். தடுப்பூசி ஒன்றே கொரோனாவை விரட்டுவதற்கான ஆயுதம் என்று அரசு கூறிவருகிறது. இத்தகைய சூழலில் தினமும் ஆயிரக்கணக்கானோர் தடுப்பூசி போட மையங்களுக்கு சென்றுவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி வருவது குறிப்பிடத்தக்கது.



Tags : Tamil Nadu , Tamil Nadu, corona vaccine, shortage
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...