×

கோவாக்சினை விட கோவிஷீல்டில் நோய் எதிர்ப்பு சக்தி 10 மடங்கு அதிகம் : இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் தகவல்!!

டெல்லி : 2 தவணைகளிலும் கோவிஷீல்டு தடுப்பூசி கோவாக்சினை விட அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துவது மருத்துவர்கள் இடையே நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் 13 மாநிலங்களில் இரு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட 518 மருத்துவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. நடப்பு ஆண்டின் ஜனவரி முதல் மே வரையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் எந்த ஒரு மருத்துவருக்கும் பெரிய அளவில் உடல்நிலை பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய் தொற்றுக்கு எதிராக கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளும் சிறப்பாக செயல்பட்டாலும் கோவிஷீல்டு அதிக அளவு நோய் எதிர்ப்பு செல்களை உருவாக்கி இருப்பது மருத்துவ ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் கோவாக்சினை விட கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் உடலில் 10 மடங்கு அதிக நோய் எதிர்ப்பு செல்கள் உருவாகி இருப்பது ரத்த சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து 2வது தவணை செலுத்திக் கொண்ட மருத்துவர்களின் ரத்தம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதில் கோவாக்சினை விட கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் உடலில் 6 மடங்கு அதிகமாக நோய் எதிர்ப்பு செல்கள் உருவாகி இருப்பதும் கண்டறியப்பட்டது. நோய் எதிர்ப்பு செல் உற்பத்தியில் கோவிஷீல்டு அதிக திறன் கொண்டு இருந்தாலும் கொரோனா தொற்றினை தடுப்பதில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுமே சிறப்பாக செயல்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Gowishfield ,Kovakin ,India , Covaxin, Covshield, Immunity
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!