×

கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் வாக்குமூலத்தின் படி: பத்மா சேஷாத்திரி பள்ளியில் 10 ஆண்டுகளில் பாதிக்கப்பட்ட 300 மாணவிகளின் பட்டியல் எடுக்கும் போலீஸ்: பள்ளி முதல்வர் கீதா, தாளாளர் ஷீலாவிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு

சென்னை: பத்மா சேஷாத்திரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் அளித்த வாக்குமூலத்தின் படி, கடந்த 10 ஆண்டுகளில் ஆசிரியரால் பாதிக்கப்பட்ட 300 மாணவிகளின் பட்டியலை போலீசார் சேகரித்து வருகின்னர். பத்மா சேஷாத்திரி பள்ளியின் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பின் போது, வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீது, பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது டிவிட்டர் பக்கத்தில் அவருடையே அரைநிர்வாண புகைப்படத்துடன் புகாரை பதிவு செய்தனர். இது நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி போலீசார் விசாரணை நடத்தினர். அதைதொடர்ந்து நங்கநல்லூர் இந்து காலனி, 7வது தெருவை சேர்ந்த பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபலனை(59) கடந்த 24ம் தேதி பிடித்து விசாரணை நடத்தினர். மேலும், ஆசிரியர் பயன்படுத்திய செல்போன் மற்றும் லேப்டாப்பை பறிமுதல் செய்து போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில் ஆசிரியர் மாணவிகளுடன் ஒன்றாக இருக்கும் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் சிக்கியது. அதைதொடர்ந்து அசோக் நகர் அனைத்து மகளிர் போலீசார் ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்தனர். இந்நிலையில் ஆசிரியர் ராஜகோபாலனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் தெரிவிக்க வாட்ஸ் அப் எண் வெளியிடப்பட்டது. அதைதொடர்ந்து  பத்மா சேஷாத்திரி பள்ளியில் தற்போது படித்து வரும் மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவிகள் என 40க்கும் மேற்பட்டோர் வாட்ஸ் அப்பில் புகார் அளித்தனர். மாணவிகளின் தொடர் புகாரால் அதிர்ச்சியடைந்த போலீசார் ஆசிரியர் ராஜகோபாலனை நீதிமன்ற அனுமதியுடன் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த 10 ஆண்டுகளாக பத்மா சேஷாத்திரி பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவிகளுக்கு அதிக மதிப்பெண் எடுக்க உதவி செய்வதாக கூறி பாலியல் தொந்தரவு செய்து வந்தது தெரியவந்தது.

அதேபோல், சிறப்பு வகுப்பு என மாணவிகளை பள்ளிக்கு வரவழைத்து விடுமுறை நாட்களில் பள்ளி அறையிலேயே மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததும் தெரியவந்தது. இந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட மாணவிகளை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாகவும், அதில் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆசிரியர் ராஜகோபாலன் மீது பள்ளி நிர்வாகத்திடன் புகார் அளித்து இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. ஆனால் மாணவிகளின் புகாரின் படி பள்ளி நிர்வாகம் ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமல், பள்ளியில் நடைபெறும் பாலியல் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை குழுவில் ஆசிரியர் ராஜகோபாலனையும் நியமித்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இதனால் தனது மீது மாணவிகள் அளித்த பாலியல் புகார்களை ஆசிரியர் சக ஆசிரியர்களுடன் இணைந்து வெளியே தெரியாமல் மறைத்து புகார் அளித்த மாணவிகளுக்கு எதிராகவே மாற்றியதும் தெரியவந்தது. பத்மா சேஷாத்திரி பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் ஒருவரின் மகனுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் வகுப்பு ஆசிரியராக இருந்துள்ளார். இதனால் ராஜகோபாலன் தனது வகுப்பு மாணவன் என்ற முறையில் பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் மகனுடன் தற்போதும் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி கொண்டு அசைக்க முடியாக நபராக பத்மா சேஷாத்திரி பள்ளியில் இருந்து வந்துள்ளார்.

இதனால் மாணவிகளிடம் அவர் தவறான எண்ணத்தில் பழகியதை சக ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் முதல்வருக்கும் தெரிந்தும் ராஜகோபாலன் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. ஆசிரியர் ராஜகோபாலன் தனது வகுப்பு மாணவனான பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் மகன் இருக்கும் தைரியத்தில் மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. 3 நாள் விசாரணையின் போது மாணவிகளின் பாலியல் விவகாரத்தில் உடந்தையாக இருந்தவர்கள் யார். பாதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட மாணவிகள் யார் யார்? என்பது குறித்து 100 பக்கம் வாக்குமூலம் ஆசிரியர் ராஜகோபாலன் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளர்.போக்சோ வழக்கு என்பதால் ராஜகோபாலன் அளித்த வாக்குமூலத்தின் படி 10 ஆண்டுகளில் பாதிக்கப்பட்ட 300 மாணவிகளின் விபரங்களை போலீசார் ரகசியமாக சேகரித்து வருகின்றனர். ஆசிரியரால் பாதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட மாணவிகள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் ஆசிரியர் மீது இதுவரை 40க்கும் மேற்பட்ட முன்னாள் மற்றும் தற்போதைய மாணவிகள் மட்டும் புகார் அளித்துள்ளனர். மீதமுள்ள 250 மாணவிகள் பாலியல் தொடர்பாக காவல் துறைக்கு எந்த வித புகார்களும் வரவில்லை.

அதேநேரம், ஆசிரியர் ராஜகோபாலன் அளித்த வாக்குமூலத்தின்படி பத்மா சேஷாத்திரி பள்ளி முதல்வரிடம் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட மாணவிகள் புகார் அளித்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் பத்மா சேஷாத்திரி பள்ளி முதல்வர் கீதா மற்றும் தாளாளர் ஷீலா ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளதாக உயர் போலீசார் தெரிவித்துள்ளனர். அதற்கான பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.



Tags : Rajagopalan ,Padma ,Seshadri ,Geetha ,Sheila , According to the confession of the arrested teacher Rajagopalan: Padma Seshadri school police take list of 300 victims in 10 years: School principal Geetha decides to re-investigate Governor Sheila
× RELATED பத்மபூஷண் வேணுமா? சுரேஷ்கோபியை...