×

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்ற 30 நாளில் வியத்தகு சாதனைகள்: தமிழக அரசு பட்டியல் வெளியீடு

சென்னை: கொரோனா பெருந்தொற்று காலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்ற 30 நாளில் நடைபெற்ற வியத்தகு சாதனைகள் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 7ம் தேதி தலைமைச் செயலகத்தில் திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் 5 புதிய திட்டங்களுக்கான 5 கோப்புகளில் கையொப்பமிட்டார்.  தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் மக்களின் நலனுக்காக 5 கோப்புகளில் கையொப்பமிட்டு பின்வரும் திட்டங்களை செயல்படுத்தினார். அதன்படி, 2,07,67,000 (2.07 கோடி) அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2,000 கொரோனா நிவாரண நிதி, ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 குறைப்பு, அனைத்து மகளிரும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்ய ஆணை, மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வுகாண ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற புதிய துறை உருவாக்கம். தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனோ நோய்க்கு சிகிச்சை. சிகிச்சைக்கான செலவினத்தை அரசே ஏற்பு.

*  பிரதமர் நரேந்திர மோடியுடன்,  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தொலைபேசி, ஆக்சிஜன் தொடர்பாக, மாநிலத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்க கேட்டுக் கொண்டார்.  
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வுகாண ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற புதிய துறை உருவாக்கி அதற்கு இந்திய ஆட்சிப் பணி நிலையில் ஒரு சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷை நியமித்தார்.
* முதலமைச்சரின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு மாவட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்திட அமைச்சர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
* ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு   கொளத்தூர் தொகுதி சட்டமன்றஉறுப்பினருமான மு.க.ஸ்டாலின் தமது இல்லத்தில் கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 20 இஸ்லாமியர்களுக்கு புத்தாடைகளும், பரிசுப் பொருட்களும் வழங்கினார்.
*  2.07 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா பாதிப்பு நிவாரண உதவித் தொகை முதல் தவணையாக 2 ஆயிரம்.
* கொரோனா பேரிடரிலிருந்து தமிழகத்தை மீட்பதற்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, தோழமைக் கட்சி என்பதைக் கடந்து மக்களின் பிரதிநிதிகளாகச் செயலாற்றுவோம். தமிழக மக்கள் இயல்பு வாழ்க்கை விரைந்து திரும்பிட நாம் அனைவரும் இணைந்து நிற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்பு வேண்டுகோள் விடுத்தார்.
* சென்னை, மீனம்பாக்கத்தில் உள்ள  70 படுக்கை வசதிகளுடன் கூடிய 2வது சித்தா சிறப்பு மையம்.
* கொரோனா தடுப்பூசி இறக்குமதி செய்வதற்கான உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி மூலம் இறக்குமதி செய்ய முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
* கடலூர் சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் கிரிம்சன் நிறுவனத்தில் 13.5.2021 அன்று அமோனியா பாய்லர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டார்.   
* முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தி.மு.க. அறக்கட்டளை சார்பாக கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியாக 1 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டது.
* ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் குறித்து அமைக்கப்பட்ட  விசாரணை ஆணையத்தின் தலைவர் அருணா ஜெகதீசன்  முதல்வரை சந்தித்து இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தார்.
* ரெம்டெசிவர் மருந்துகளை பதுக்குவோர் மீதும், ஆக்சிஜன் சிலிண்டர்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்வோர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
* ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சரிடம் 1 கோடி வழங்கினார்.
* ஒன்றிய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ்கோயலுக்கு விடுத்த கோரிக்கையால், ஏற்று நாளொன்றுக்கு 7000ல் இருந்து நாளொன்றுக்கு 20,000 என்ற அளவில் உடனடியாக உயர்த்தி வழங்கப்பட்டது.
* மே 17ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில், சன் குழுமத்தின் சார்பில் அதன் தலைவர் கலாநிதிமாறன் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக மாநில பேரிடர் மேலாண்மை நிதியத்திற்கு 10 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
* கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகைக்கான முதல் தவணை 2000 ரூபாய் நிவாரணத் தொகையை வழங்கினார்.
* கரிசல்காட்டு எழுத்தாளர் மறைந்த கி.ராஜநாராயணன் படித்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை அரசு சார்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கவும்,  ஓர் அரங்கம் நிறுவப்பட்டு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் எனவும் தெரிவித்துக் கொண்டார்.  
*  உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற புதிய துறையில் மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட சுமார் 4 லட்சம் மனுக்களில் 70,000 மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவாரூர், தேனி ஆகிய ஆறு மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட 549 மனுக்களின் மீது முழுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   
* முதலைமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆக்சிஜன், தடுப்பூசிகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.  
* ரெம்டெசிவிர் மருந்தைப் பெற இைணய தள வசதி  ஏற்படுத்தப்பட்டது.  
* பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி.ரவிச்சந்திரன், எஸ்.நளினிஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்.  ஏழு பேரையும் விடுதலைசெய்ய 9.9.2018 அன்று தமிழ்நாடு அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பியுள்ள தீர்மானத்தை உடனடியாக ஏற்றுக் கொண்டு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளார்.
* திருப்பூர் மாவட்டத்தில் 18 முதல் 44 வயரை வரைஉள்ள பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்தார்.
* நோய்த்தொற்று ஏற்பட்டு தங்கள் இன்னுயிரை இழந்தவர்களின் 13 நபர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்குதலா 25 லட்சம் வீதம் 3.25 கோடி நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 71 நபர்களில் 36 நபர்களுக்கான முன்மொழிவுகள் பெறப்பட்டு அவர்களுக்கு தலா ₹25 லட்சம் வீதம் ₹9 கோடியினை நிவாரணத் தொகை.
* மதுரை, தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனையில் 500 படுக்கைகளில் முதற்கட்டமாக 200 படுக்கைகொண்ட கோவிட் சிறப்பு சிகிச்சை மையத்தினை திறந்துவைத்தார்.  திருச்சியில் கொரோனா நலவாழ்வு மையம்.
* தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் கொடும் காயமடைந்தவர்கள் 17 பேருக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப கருணை அடிப்படையில் பணி.
* மாற்றுத் திறனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கும் வகையில் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள்.n முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்துச் சட்டமன்றக் கட்சி உறுப்பினர்கள் குழுக்கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.  கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க  அமைச்சர்களை தொடர்புடைய மாவட்டங்களுக்கு நியமித்தார்.
* சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 130 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை திறந்துவைத்தார்.
* செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள எச்.எல்.எல் பயோடெக் தடுப்பூசி மையத்தை ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் மாவட்டம் நேமம் கிராமத்தில் தடுப்பூசி போடக் கூடிய பணிகளை தொடங்கி வைத்தார்.
* நாடாளுமன்ற நடைமுறைகளைப் புறக்கணித்து அவசரம் அவசரமாகக் கொண்டு வந்த ‘விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவைச்சட்டம் 2020‘, ‘வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டு சட்டம் 2020‘, ‘அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச்சட்டம் 2020’ ஆகிய மூன்று வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும்.
* இணைய வழி வகுப்புகளை முறைப்படுத்துவது குறித்தும் அதில் தவறுகள் நடக்கும் பட்சத்தில் அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
* பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் பணிபுரியும் அரசு அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் கொரோனா நோய்த் தொற்று காரணமாக இறக்க நேரிட்டால், அவர்களது வாரிசுதாரர்களுக்கு ₹10 லட்சமாக உயர்த்தியும், ஊடகவியலாளர்களுக்கான ஊக்கத் தொகையினை ₹3 ஆயிரத்திலிருந்து, ₹5 ஆயிரமாக உயர்த்தி வழங்க உத்தர
விட்டார்.  
* முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க, சிப்காட் நிறுவனம், சிங்கப்பூர், மத்தியக் கிழக்கு நாடுகள் மற்றும் துபாயிலிருந்து 1,915 ஆக்சிஜன் உருளைகள், 2,380 ஆக்சிஜன் முறைப்படுத்தும் கருவிகள், 3,250 ஓட்ட அளவு உருளைகள், 5,000 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 800 ஆக்சிஜன் நிரப்பட்ட உருளைகள் என மொத்தம் 40.71 கோடி ரூபாய் அளவிற்கு இறக்குமதி செய்ய ஆணைகள்  அளித்துள்ளது.
* ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கையை அரசு கவனமாகப் பரிசீலித்தது. ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், 38 வழக்குகளைத் திரும்பப் பெற்றிடவும், அதில் தொடர்புடைய அரசியல் கட்சித் தலைவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப் பெற்றிட உத்தரவிட்டார்.
* கோயம்புத்தூர் மாவட்டத்தில் 306 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கோவிட் சிகிச்சை மையம். திருவள்ளுர் மாவட்டத்தில் கர்ப்பிணித் தாய்மார்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்.
* காஞ்சிபுரம் மாவட்டம், ஓரகடத்தில் கொரோனா தடுப்பு முகாமை தொடங்கிவைத்து பார்வையிட்டார். திருப்பெரும்புதூரில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் திரவ ஆக்ஸிஜன் நிரப்பும் பணிகளைப் பார்வையிட்டார்.
* கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்திடமூன்று மாவட்டங்களுக்கு இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களை நியமித்து முதலமைச்சர் உத்தரவிட்டார்.  
* தமிழ்நாடு மின் ஆளுமை ஆணையர்அலுவலக வளாகத்திற்கு நேரில் சென்று, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை குறித்து விரிவான ஆய்வு.
* முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக தங்கள் சேமிப்பை வழங்க முன்வரும் சிறுவர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில், திருக்குறள் நூல்.
* கொரோனா தடுப்பிற்கு நிதி வழங்க வேண்டுமென்று முதலமைச்சரின் வேண்டுகோள் விடுத்ததற்கிணங்க, இதுவரை 186.15 கோடி ரூபாய் நன்கொடை.
* தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் வைப்பீடு. பட்டப் படிப்பு வரையிலான கல்விக் கட்டணம். உடனடி நிவாரணத் தொகையாக மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
* அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 5 மருத்துவர்கள் மற்றும் 5 செவிலியர்களுக்கு தற்காலிக பணிநியமன ஆணைகளை வழங்கினார். திருப்பூரில் 20 கார் ஆம்புலன்ஸ் சேவையினையும் தொடங்கி வைத்து, 6 மருத்துவர்களுக்கும், 4 செவிலியர்களுக்கும் தற்காலிக பணிநியமன ஆணைகளையும் வழங்கினார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

கொரோனா வார்டில் கவச உடை அணிந்து ஆய்வு
ஈரோடு, பெருந்துறை, திருப்பூர், கோயம்புத்தூரில் ஆகிய மாவட்டங்களில் கொரோனா நோய் பரவல் தடுப்பு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி / இ.எஸ்.ஐ. மருத்துவமனை வளாகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பிரிவுக்கு நேரில் சென்று நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்து, அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். கொரோனா தொற்றால் பாதித்தவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும் 50 கார் ஆம்புலன்ஸ் சேவையினை தொடங்கி வைத்தார்.



Tags : MK ,Stalin ,DMK Government , Dramatic Achievements in 30 Days of MK Stalin-led DMK Government: Tamil Nadu Government List Release
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...