×

சசிகலா குறித்து விமர்சித்து பேட்டி: கே.பி. முனுசாமியின் பி.ஏ.வுடன் அதிமுக தொண்டர் வாக்குவாதம்: வைரலாகும் ஆடியோவால் பரபரப்பு

கிருஷ்ணகிரி: சசிகலா குறித்து விமர்சித்து பேட்டியளித்ததாக, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏவின் பி.ஏ.,வுடன் அதிமுக தொண்டர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி, அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக அறிவித்த சசிகலா, தேர்தல் முடிவுகளுக்கு பின்னர், அதிமுக தொண்டர்களிடம் செல்போனில் பேசிய ஆடியோக்கள், சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. குறிப்பாக தொண்டர் ஒருவரிடம் சசிகலா பேசியதாக வெளியான ஆடியோ ஒன்றில், ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்தோம் பா, கட்சியை அப்டி விட்டுட முடியாது. நம்பிக்கையோடு இருங்க, கூடிய சீக்கிரம் சரி செஞ்சுடலாம் என அவர் பேசிய பேச்சு, அதிமுக மேல்மட்ட தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், வேப்பனஹள்ளி தொகுதி எம்எல்ஏவுமான கே.பி.முனுசாமி, சசிகலா பேசியது அதிமுக தொண்டர்களுடன் அல்ல, அமமுக தொண்டருடன் தான் அவர் பேசியுள்ளார். இவ்வாறு செய்வதன் மூலம் அதிமுகவுக்குள் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறார். அது நடக்காது என கூறியிருந்தார். இந்த நிலையில், கே.பி.முனுசாமியின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது பி.ஏ.,வுடன் அதிமுக தொண்டர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன் விவரம் வருமாறு:
அதிமுக தொண்டர்: கே.பி.எம். சாரோட பி.ஏ.வுங்களா?
கே.பி.முனுசாமி பி.ஏ: சொல்லுங்க...
அதிமுக தொண்டர்: என்ன சார் கே.பி.எம்., ஐயா ஒரு பேட்டி கொடுத்துள்ளார். என்ன விஷயம் சார்?. கட்சியை நாலு, மூணாக்க பாக்கிறாங்களோ.
பி.ஏ: எப்படி?
தொண்டர்: இவர் இந்த மாதிரி சொல்வதற்கு காரணம் என்னங்க சார்?
பி.ஏ: இது ஆரம்பத்தில் இருந்து சொல்லினு வந்தது தான். புதுசா எதுவும் சொல்லலையே.
தொண்டர்: எப்படி? கவுண்டர்களுக்கும், வன்னியர்களுக்கும் உண்டான சாதி கட்சியா மாத்திக்கலாம் என்றா?
பி.ஏ: இல்லை, இல்லை அப்படியெல்லாம் இல்லை.
தொண்டர்: இது அம்மாவின் பொது உடமையான கட்சி. இதில் நீங்க சேர கூடாது, அவங்க சேரக்கூடாது என யாரும் சொல்லும் அதிகாரத்தை அம்மாவோ, அய்யாவோ கொடுத்துட்டு போகல.
 பி.ஏ: இன்னைக்கு என்ன சொன்னாரோ, இதையே தான் ஆரம்பத்தில் இருந்து அவர் சொல்லிட்டு வருகிறார்.
தொண்டர்: ஆரம்பத்தில் இருந்து என்ன சார் சொன்னாங்க. இவங்க கட்சிக்கு வரணும். சசிகலா அம்மா கட்சிக்கு உள்ளே வரக்கூடாது என சொல்லியிருக்கிறார்.
 பி.ஏ: ஆமாம்.
தொண்டர்: எதற்கு?
பி.ஏ: அவங்களே பேட்டி கொடுத்தாங்களே. எத்தனையோ மீட்டிங், பேட்டியில் அரசியலில் இருந்து நான் ஒதுங்கி கொள்கிறேன் என சொன்னாங்களே.
தொண்டர்: நான் தற்காலிகத்திற்கு ஒதுங்கிக்கிறேன். கட்சி ஒற்றுமையாக ஆட்சி அமைக்க வேண்டும் என்று தான் சொன்னாங்களே தவிர, கட்சியை நாலு, மூணா கூறு போட்டு விக்க சொல்லலையே.
பி.ஏ: இதில் என்ன இருக்கு கூறு போட்டு விக்க?
தொண்டர்: அதான் வித்துட்டாங்களே. இதுக்கு கே.பி.எம். சார் தான் முழு காரணம் எல்லாத்துக்கும். ஒவ்வொரு தொண்டனும் கொந்தளிச்சு போய் கிடக்கிறோம் சார்.
பி.ஏ: எந்த தொண்டனும் பேசல. அவங்க அமமுக காரணுங்க.
தொண்டர்: உண்மையான அதிமுக தொண்டன் பேசுகிறேன். சரிங்களா?
பி.ஏ: சரிங்க, சரிங்க. நீங்க நாளைக்கு பேப்பரில் விளம்பரம் கொடுங்க.
தொண்டர்: மைக் போட்டு தான் இனி கே.பி.முனுசாமியை பேசணும். அவர் தலைமைக்கு கட்டுப்பட்டு இருக்கிறாரா? எங்க ஒருங்கிணைப்பாளரிடம் பர்மிஷன் வாங்கிட்டு தான் அவர் பேட்டி கொடுத்தாரா?
பி.ஏ: எந்த ஒருங்கிணைப்பாளரு? எல்லாரிடமும் அவர் பேசிட்டு தான் பேட்டி கொடுத்தார். யாருகிட்ட வாங்கணும்?
தொண்டர்: ஓ, அப்ப அவர் தான் கட்சி தலைவரா?
 பி.ஏ: ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் 2 பேரு. 4 பேரு தான் ஆரம்பத்தில் இருந்து முடிவு செய்கிறார்கள்.
தொண்டர்: அப்ப அந்த 4 பேரு என்ன முடிவு எடுத்தாலும் பேட்டி கொடுத்துக்கலாமா?
 பி.ஏ: அப்படி இல்லைங்க. அவரிடம் பேட்டி கேட்கிறார்கள். அதற்கு அவர் பதில் சொல்கிறார்.
தொண்டர்: அப்ப இந்த நாலு பேரும், நாலு மைக்கை பிடித்து எது வேணும்னாலும் பேசலாமா?
பி.ஏ.: இல்லை, இல்லை, அவரிடம் கேட்டாங்க. அவங்க கேட்ட கேள்விக்கு பதில் சொன்னார்.
தொண்டர்: கிடையாதுங்க சார், நீங்களா பிரஸ் மீட் வச்சு, பேட்டி கொடுத்திருக்கிறார். உங்களை யாரோ தூண்டுதல் பண்ணியிருக்காங்க. அது தான் உண்மை.
பி.ஏ: அதெல்லாம் இல்லை.
தொண்டர்: கட்சியை நீங்க கெடுக்கணும்னு முடிவு பண்ணிட்டிங்க. அது எந்த லெவலில் போய் முடியுமோ என பார்த்துக்கலாம். சரிங்களா.
இவ்வாறு அந்த உரையாடல் முடிகிறது.
ஏற்கனவே, சசிகலா தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடையே கருத்து வேறுபாடுகள் நிலவும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த உரையாடல் அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Tags : Sasikala ,K. RB ,Munusami ,PA , Critical interview about Sasikala: KP AIADMK volunteer debate with Munuswamy's BA: Stir by viral audio
× RELATED சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில்...