குமரி அணை பகுதிகளில் மழை நீடிப்பால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு: கன்னிப்பூ சாகுபடி பணி தீவிரம்

நாகர்கோவில் : குமரி அணை பகுதிகளில் மழை நீடிப்பதால் தாமிபரணி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த 3ம் தேதி இரவு முதல் குமரி மாவட்டத்திலும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. பேச்சிப்பாறை அணை பகுதியில் நேற்று முன்தினம் இரவும் மழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 20 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து நேற்று காலை மொத்தமாக 4,275 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக குழித்துறை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்து வருகிறார்கள். கோதையாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் கொட்டி வருகிறது. அங்குள்ள சிறுவர் பூங்காவை மூழ்கடித்து வெள்ளம் பாய்கிறது.

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று காலை 43.31 அடியாகவும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.95 அடியாகவும், சிற்றார் 1 அணை நீர்மட்டம் 16.50 அடி ஆகவும், சிற்றார் 2 அணை நீர்மட்டம் 16.60 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 26.70 அடியாகவும் இருந்தது. மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ளளவான 54.12 அடியை எட்டி நிரம்பி வழிகிறது. முக்கடல் அணையும் முழு கொள்ளளவான 25 அடியை எட்டியது. அணைகள் நிரம்பி உள்ளதால், தற்போது மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிகளுக்கான பணிகள் தொடங்கி உள்ளன. பாசன கால்வாய்கள் தூர்வாரும் பணிகளும் நடக்கின்றன. மாவட்டத்தில் உள்ள 2460 குளங்களும் நிரம்பி உள்ளன. இதனால் இந்த முறை பாசனத்துக்கு நீர் தட்டுப்பாடு வராது என்றும், கடைமடை வரை தண்ணீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: