×

மீண்டும் துளிர்விடும் அமைப்பு: பொற்கோயிலுக்குள் காலிஸ்தான் கோஷம்

அமிர்தசரஸ்: ‘புளூ ஸ்டார் ஆபரேஷன்’ நினைவு தினத்தை முன்னிட்டு பொற்கோயிலில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீக்கியர்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து தனி நாடாக அறிவிக்கும்படி காலிஸ்தான் அமைப்பு தீவிரவாதிகள் போராடினர். இதை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு ஒடுக்கியது. பாதுகாப்பு படையுடன் நடந்த சண்டையின் போது, அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலுக்குள் சென்று தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் பதுங்கினர். அவர்கள் மீது, ‘ஆபரேஷன் புளூ ஸ்டார்’ என்ற பெயரில் ராணுவம் நடவடிக்கை எடுத்தது. பொற்ேகாயிலுக்குள் நுழைந்து தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது. பொற்கோயிலில் எடுக்கப்பட்ட இந்த ராணுவ நடவடிக்கையை பஞ்சாப் அமைப்புகள், சில கட்சிகளும் ஆண்டுதோறும் சோக தினமாக அனுசரித்து வருகின்றன. 1984ம் ஆண்டு, ஜூன் மாதம் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தின் 37ம் ஆண்டு நினைவு தினம் பஞ்சாபில் நேற்று அனுசரிக்கப்பட்டது.

பொற்கோயிலில் நடந்த நிகழ்ச்சியில் சிரோமணி அகாலி தளத்தை சேர்ந்தவர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். செங்கோட்டையில் குடியரசு தின வன்முறையில் கைதான நடிகர் தீப் சித்துவும் இதில் பங்கேற்றார். இதில் பங்கேற்ற பலர், காலிஸ்தான் அமைப்பின் கொடியுடன் பங்கேற்றனர். அவர்களை போலீசாரோ, நிகழ்ச்சியை நடத்தியவர்களோ தடுக்கவில்லை.  நிகழ்ச்சியின் போது கூட்டத்தில் பங்கேற்ற பலர், திடீரென காலிஸ்தான் ஆதரவு கோஷமிட்டனர். இதனால், பொற்கோயிலுக்குள் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஒடுக்கி வைக்கப்பட்டு இருந்த காலிஸ்தான் அமைப்பின் செயல்பாடு சமீப காலமாக அதிகமாகி வருகிறது. டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் இதன் ஆதரவாளர்கள் அதிகளவில் பங்கேற்றனர். பொற்கோயிலில் நேற்று காலிஸ்தான் கொடியுடன் பங்கேற்ற இவர்களின் செயல்பாடு வெளிப்படையாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


Tags : Golden Temple , Re-emergence system: Khalistan slogan inside the Golden Temple
× RELATED குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு புனித...