மோடி உட்பட யாரும் பிறந்தநாள் வாழ்த்து கூறவில்லை உபி தேர்தல் நெருங்கும் நிலையில் யோகியை ஓரம் கட்டும் பாஜ: முதல்வர் வேட்பாளர் மாற்றமா?

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், இம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பாஜ மேலிடம் ஓரம் கட்டுகிறது. அவருக்கு பிரதமர் மோடி, பாஜ தலைவர் நட்டா உட்பட யாருமே பிறந்த நாள் வாழ்த்து கூறாதது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  உத்தர பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. அதேபோல், மேலும் 4 மாநிலங்களுக்கும் தேர்தல் நடக்க இருக்கிறது. கொரோனா தொற்று அச்சுறுத்தல் இருந்த போதிலும் திட்டமிட்டப்படி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறி வருகின்றன. இந்த தேர்தல்களை சந்திக்க பாஜ இப்போதே தயாராகி வருகிறது. உத்தர பிரதேசத்தில் பாஜ ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார். மோடிக்கு அடுத்தப்படியாக, அடுத்த பிரதமராகக் கூடும் என இவரை பற்றி சமீப காலமாக பேச்சு அடிப்பட்டு வருகிறது. இந்நிலையில், இவரை திடீரென பாஜ மேலிடம் ஓரம் கட்டுகிறதா? என்ற சந்தேகம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இவருடைய பிறந்தநாள் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.  வழக்கமாக,  வெளிநாட்டு தலைவர்கள், உள்நாட்டு தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுர்களுக்கு டிவிட்டரில் பிறந்த நாள் உள்ளிட்ட விசேஷ நாட்களில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். ஆனால், யோகிக்கு பிரதமர் மோடி சமூக வலைதளமான டிவிட்டரில் வெளிப்படையாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரும் டிவிட்டரில் வாழ்த்து தெரிவிக்கவில்லை. இது, தேசிய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆனால், பிரதமர் மோடி, அமித்ஷா, நட்டா ஆகியோர் முதல்வர் யோகியை தொலைபேசியில் அழைத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இதேபோல், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துைண ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முன்னாள் உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி உள்ளிட்டோரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். யோகி மீது பாஜ தலைமை அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், அவருக்கு மோடி உள்ளிட்ட தலைவர்கள் யாரும் வெளிப்படையாக பிறந்தநாள் வாழ்த்து கூறாமல் தவிர்த்தது சந்தேகத்தை ஏற்படுத்தி உளளது. இதனால், உபி சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் மாற்றப்படலாம் என்ற யூகம் அதிகமாகி இருக்கிறது.

அமைச்சரவையில் மாற்றம் இல்லை

பாஜ தேசிய துணை தலைவர் ராதா மோகன் சிங். சமீபத்தில், உத்தரப் பிரதேச பாஜ பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இவர், ஆளுநர் ஆனந்தி பென் பட்டேலை நேற்று திடீரென சென்று சந்தித்துப் பேசினார். பின்னர், அவர் அளித்த பேட்டியின்போது, ‘உத்தர பிரதேச அமைச்சரவை மாற்றம் பற்றி ஆளுநரிடம் பேசினீர்களா?’ என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், ‘‘உத்தரப் பிரதேச பாஜ பொறுப்பாளராக பொறுப்பேற்ற பின்னர் ஆளுநரை சந்திக்கவில்லை. ஆளுநர் குஜராத் முதல்வராக இருந்தபோது நான் விவசாய துறை அமைச்சராக இருந்தேன். கடந்த 6 மாதங்களாக அவரை சந்திக்கவில்லை. இது, எனது தனிப்பட்ட முறையிலான மற்றும் மரியாதை நிமித்தமான சந்திப்பாகும். உத்தரப் பிரதேச அமைச்சரவையில் மாற்றம் செய்வதற்கான திட்டங்கள் ஏதும் இப்போதைக்கு இல்லை,” என்றார்.

Related Stories:

>