தமிழகம் முழுவதும் 12 ஆண்டுகளாக திருப்பணி நடக்காத கோயில்களில் கும்பாபிஷேகம்: அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் 12 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடக்காத கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோயில்களில் ஒன்று வடபழனி முருகன் கோயில். இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:வடபழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும். பக்தர்கள் வசதிக்காக மணமக்கள் உடைமாற்று அறை, தங்கும் அறைகள் விரைவில் கட்டப்படவுள்ளது. தமிழகம் முழுவதும் 12 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தாத கோயில்களை கணக்கெடுத்து, அதை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.  தீ விபத்து ஏற்பட்ட மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஆகம விதிகளின்படி பழமை மாறாமல் கோயில் புனரமைக்கப்படும்.

இந்து சமய அறநிலைத்துறை சார்பில் 12ம் தேதியில் இருந்து ஒரு லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்படுகிறது. ஊரடங்கு முடியும் வரை உணவு பொட்டலங்கள் வழங்கப்படும். சென்னையை பொறுத்த வரையில் உணவுக்கு பஞ்சம் இல்லை, உணவு இல்லாத நிலை ஏற்பட்டால் அம்மா உணவகங்களிலும் இலவசமாக உணவு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.   ஒரு உறையில் ஒரு கத்தி தான் இருக்க வேண்டும். ஆனால், அதிமுகவில் நான்கு, ஐந்து கத்திகள் இருப்பதால் பல பிரச்னைகள் உள்ளது. திமுகவில் ஒரே தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருப்பதால் எந்தவித கருத்து வேறுபாடுகளுக்கும் இடம் தராமல் கொரோனாவை வீழ்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: