×

ஊரடங்கு தளர்வை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பேட்டி!

சென்னை: கோயம்பேடு சந்தையில் உள்ள வியாபாரிகள் அனைவரும் அடுத்த 10 நாட்களுக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், கடந்த மாதம் 10ம் தேதி முதல் ஊரடங்கை அறிவித்து வருகிறது. அதன்படி, சில தளர்வுகளுடன் ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து தமிழக அரசு நேற்று அறிவித்தது. இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 14ம் தேதி வரையில் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் குப்பைகளை சுத்தம் செய்யும் பணிகளை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; ஞாயிற்றுக்கிழமைகளில் பகல் 12 முதல் இரவு வரை குப்பைகளை சுத்தம் செய்யும் பணி நடைபெறும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; மக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியேறுவதை தவிர்க்க வேண்டும். ஊரடங்கு தளர்வை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா பரவல் தடுப்பு விதிகளை சென்னை வாசிகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். மக்கள் கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடித்ததால் சென்னையில் பாதிப்பு குறைந்தது.

ஒருவர் மாஸ்க் அணியாவிட்டால், சம்மந்தப்பட்டவரை மாஸ்க் அணிய மக்கள் அறிவுறுத்த வேண்டும். கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விற்பனைக்கு பின் தீவிர தூய்மைப்பணி நடைபெறும். மே மாதத்தில் 9,003 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 16 பேருக்கு கொரோனா உறுதியானது. இதுவரை 6,340 வணிகர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அடுத்த 10 நாட்களுக்குள் வியாபாரிகள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும். வியாபாரிகள்  தடுப்பூசி போடாவிட்டால் அனுமதி மறுக்கப்படும். தடுப்பூசி போட்டுக் கொள்ள வியாபாரிகள் ஆர்வம் காட்டுகின்றனர் எனவும் கூறினார்.


Tags : Chennai ,Municipal Commissioner ,Gagandeep Singh Badi , Curfew relaxation should be used only for essential needs: Interview with Chennai Corporation Commissioner Kagandeep Singh!
× RELATED காலை 5.30 மணி முதல் மாதிரி வாக்குப்பதிவு:...