×

பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்திய பெண் உள்பட 4 பேர் கைது: கேரளாவில் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே பல கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்திய தம்பதி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். ேகரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி பகுதியில் ஒரு கும்பல் போதைப்பொருள் விற்பனை செய்வதாக, மாவட்ட எஸ்பி கார்த்திக்குக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை அங்கமாலி லாட்ஜ்களில் அதிரடி சோதனை நடத்தியது. இதில் ஒரு லாட்ஜில் சந்தேகத்துக்கு இடமான வகையில் தங்கியிருந்த 2 பேரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

மேலும் போலீசார் நடத்திய சோதனையில் அவர்களிடம் இருந்து 2 கிலோ எம்பிஎம்ஏ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு பல கோடிகளாகும். இதையடுத்து சேர்த்தலா பகுதியை சேர்ந்த சிவபிரசாத் (29), ஆபித் (33) ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த போதைப்பொருளை அவர்கள் சென்னையில் இருந்து கடத்தி வந்துள்ளனர். மேலும் அவர்கள் பயணம் செய்த காரையும் போலீசார் கைப்பற்றினர்.
தம்பதி கைது இதுபோல பெங்களூரு - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் ஆலுவா வந்தபோது போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பயணி ஒருவரிடம் இருந்து 22 கிராம் எம்பிஎம்ஏ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. விசாரணையில் அவர் கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிப்பாடு பகுதியை சேர்ந்த சனூப் (24) என தெரியவந்தது. இதையடுத்து சனூப் மற்றும் உடன் வந்த அவரது மனைவி ரிஸ்வானா (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் பெங்களூருவில் இருந்து போதைப்பொருளை வாங்கி, கேரளாவில் விற்பனை செய்வதும் தெரியவந்தது. சனூப் மீது கேரளாவின் பல்வேறு காவல்நிலையங்களில் போதைப்பொருள் விற்பனை செய்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Tags : Four arrested for drug trafficking worth crores of rupees
× RELATED இது உங்கள் ராம ராஜ்ஜியம்: ஆம் ஆத்மி இணையதளம் தொடக்கம்