விஷ சாராய பலி 102 ஆக அதிகரிப்பு: 38 பேர் கைது; 514 போலீசார் இடமாற்றம்

அலிகார்: அலிகாரில் விஷ சாராயம் குடித்து இதுவரை 102 பேர் பலியான நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக 38 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை 514 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர். உத்தரபிரதேசத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது. கடந்த 25ம் தேதி ஹாத்ரஸ் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சிய 85 பேரை போலீஸார் கைது செய்தனர். அத்துடன் அவர்களிடமிருந்து 1,700 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினர். முன்னதாக அலிகார் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் உயிரிழந்தனர். 3 கிராமங்களில் உள்ள அரசு உரிமம் பெற்ற மதுக்கடைகளில் வாங்கிய மதுவை குடித்த பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்கள் குடித்தது, கள்ளச் சாராயமே என்பது உறுதிசெய்யப்பட்டதால், மாவட்ட கலால் அதிகாரி உட்பட 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். விஷ சாராய உயிரிழப்பு தொடர்பாக 5  பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கடந்த 2 வாரத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் விஷ சாராயம் குடித்து சிகிச்சை பெற்ற வந்தவர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 102  ஆக அதிகரித்துள்ளது. மேலும், 20க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்ட 38 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தலைமறைவாக உள்ள பிரதான குற்றவாளி ரிஷி சர்மா குறித்து தகவல் தெரிவிப்போருக்கு சன்மானம் ரூ.75 ஆயிரம் வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது. ரிஷ சர்மாவின் சகோதரர், மனைவி, மருமகன், மகன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அலிகார் மாவட்டத்தில் இருந்து 514 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டதாக எஸ்பி நைதனி தெரிவித்தார்.

Related Stories:

>