பொள்ளாச்சியில் இருந்து சொந்த ஊர் சென்ற போது நடுவழியில் உணவின்றி தவித்த கர்நாடக தொழிலாளர்களுக்கு உதவிய தன்னார்வலர்கள்

சத்தியமங்கலம்: கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள ஹுன்சூர் பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் குடும்பத்துடன் தங்கி கோழிப் பண்ணைகளில் கூலி வேலை செய்து வந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கோழி பண்ணைகளில் வேலை இல்லாததால் உணவின்றி தவித்த தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தை சேர்ந்த 72 பேரை நேற்று முன்தினம் இரவு பொள்ளாச்சி வருவாய்த்துறையினர் வாகனங்களில் ஏற்றி கர்நாடக மாநிலத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் வாகன ஓட்டுனர் தொழிலாளர்களை பாதிவழியில் சத்தியமங்கலத்தில் இறக்கி விட்டு திரும்பிச் சென்றதால் தொழிலாளர்கள் இரவு நேரத்தில் ஊருக்கு செல்ல முடியாமல் உணவின்றி சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகம் அருகே தவித்தபடி நின்றிருந்தனர்.  

இதைக்கண்ட சத்தியமங்கலத்தை சேர்ந்த இ.கம்யூ கட்சி நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் அவர்களிடம் விசாரித்ததில் ஊருக்குச் செல்லும் வழியில் பாதிவழியில் ஓட்டுநர் இறக்கிவிட்டு சென்றதாக தெரிவித்ததால் அவர்களுக்கு உணவு மற்றும் பால் ஏற்பாடு செய்து கொடுத்து இரவில் தங்க ஏற்பாடு செய்தனர். இதையடுத்து நேற்று காலை சத்தியமங்கலம் வருவாய்த்துறை அதிகாரிகளை வரவழைத்து 72 பேரையும் வாகனங்கள் ஏற்பாடு செய்து கர்நாடக மாநிலத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories:

>