×

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் ஜோகோவிச்: ‘டீன் ஏஜர்’ முசெட்டி முன்னேற்றம்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் தகுதி பெற்றார். மூன்றாவது சுற்றில் லித்துவேனியாவின் ரிகார்டஸ் பெரான்கிஸுடன் (30 வயது, 93வது ரேங்க்) நேற்று மோதிய ஜோகொவிச் (34 வயது, செர்பியா) 6-1, 6-4, 6-1 என நேர் செட்களில் மிக எளிதாக வென்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 32 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. மற்றொரு 3வது சுற்றில் இத்தாலி வீரர்கள் மார்கோ செச்சிநடோ (28 வயது, 83வது ரேங்க்) - லொரன்சோ முசெட்டி (19 வயது, 76வது ரேங்க்) மோதினர். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், முசெட்டி 3-6, 6-4, 6-3, 3-6, 6-3 என 5 செட்கள் கடுமையாகப் போராடி வென்றார்.

இப்போட்டி 3 மணி, 7 நிமிடத்துக்கு நீடித்தது. முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் களமிறங்கியுள்ள முசெட்டி, 4வது சுற்றில் ஜோகோவிச்சுடன் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னணி வீரர்கள் டீகோ ஷ்வார்ட்ஸ்மேன் (அர்ஜென்டினா), ஜானிக் சின்னர் (இத்தாலி, 19 வயது), ஜான் ஸ்டிரப் (ஜெர்மனி) ஆகியோரும் 4வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். ஸ்விடோலினா அதிர்ச்சி: 5வது ரேங்க் வீராங்கனை எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) தனது 3வது சுற்றில் செக் குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவாவுடன் (33வது ரேங்க்) மோதினார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த பார்போரா 63, 6-2 என நேர் செட்களில் ஸ்விடோலினாவை வீழ்த்தி 4வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு 3வது சுற்றில் அமெரிக்காவின் சோபியா கெனின் (4வது ரேங்க்) 4-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் சக வீராங்கனை ஜெஸிகா பெகுலாவை வீழ்த்தினார். முன்னணி வீராங்கனைகள் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), மார்தா கோஸ்ட்யுக் (உக்ரைன்) ஆகியோரும் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். ஸ்வியாடெக் அதிரடி: மகளிர் ஒற்றையர் பிரிவு நடப்பு சாம்பியன் இகா ஸ்வியாடெக் (போலந்து) நேற்று தனது 3வது சுற்றில் அனெட் கோன்டாவெய்ட்டை (எஸ்டோனியா) எதிர்கொண்டார். கடும் போராட்டமாக அமைந்த முதல் செட்டில் 7-6 (7-4) என டைபிரேக்கரில் வென்ற ஸ்வியாடெக், அடுத்த செட்டில் அதிரடியாக விளையாடி கோன்டாவெய்ட்டின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்தார். அவர் 7-6 (7-4), 6-0 என்ற நேர் செட்களில் வென்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 22 நிமிடத்துக்கு நீடித்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு நடப்பு சாம்பியன் நடால் (ஸ்பெயின்) தனது 3வது சுற்றில் 6-3, 6-3, 6-3 என்ற நேர் செட்களில் கேமரான் நோரியை (தென் ஆப்ரிக்கா) வீழ்த்தினார்.

Tags : Djokovic ,French Open ,Musetti , Djokovic advances to 4th round of French Open tennis
× RELATED பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் ஜோகோவிச்சை வீழ்த்திய சென்னை ஓபன் ரன்னர்!