×

சவுத்தீ வேகத்தில் சரிந்தது இங்கிலாந்து

லண்டன்: நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்டில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 275 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. நியூசி. வேகம் சவுத்தீ 6 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 378 ரன் குவித்தது. அறிமுக தொடக்க வீரர் கான்வே 200 ரன் விளாசினார். நிகோல்ஸ் 61, லாதம் 23, வேக்னர் 25* ரன் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் ராபின்சன் 4, மார்க் வுட் 3, ஆண்டர்சன் 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து  அணி 2ம் நாள் ஆட்டம் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன் எடுத்திருந்த நிலையில், 3வது நாள் ஆட்டம் கனமழை காரணமாக கைவிடப்பட்டது. பர்ன்ஸ் 59 ரன், கேப்டன் ரூட் 42 ரன்னுடன் நேற்று 4வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். ரூட் மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல், ஜேமிசன் வீசிய முதல் பந்திலேயே வெளியேறினார்.

போப் 22, லாரன்ஸ் (0), பிரேஸ் (0) ஆகியோர் சவுத்தீ வேகத்தில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து 140 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து திணறியது. இந்நிலையில், பர்ன்ஸ் - ராபின்சன் ஜோடி 7வது விக்கெட்டுக்கு 63 ரன் சேர்த்தது. ராபின்சன் 42, மார்க் வுட் 0, பிராடு 10 ரன்னில் பெவிலியன் திரும்பினர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் போராடிய பர்ன்ஸ் சதம் விளாசினார். பர்ன்ஸ் - ஆண்டர்சன் இணை 10வது விக்கெட்டுக்கு 52 ரன் சேர்த்தது. பர்ன்ஸ் 132 ரன் (297 பந்து, 16 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்க, இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 275 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆண்டர்சன் 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசி. பந்துவீச்சில் சவுத்தீ 6, ஜேமிசன் 3, வேக்னர் 1 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து, 103 ரன் முன்னிலையுடன் நியூசி. 2வது இன்னிங்சை தொடங்கியது.


Tags : England ,South , England collapsed at the pace of the South
× RELATED ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் தங்கம் வென்றார் கரோலினா மரின்