×

பணி காலத்தில் கிராம உதவியாளர் உயிரிழப்பு கருணை வேலை மகளுக்கா, மருமகளுக்கா? ஐகோர்ட்டில் வினோத வழக்கு

சென்னை: ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே  உள்ள அரச்சலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். கிராம உதவியாளராக  பணியாற்றி வந்தார். இவரது மனைவி வெள்ளையம்மாள். இவர்களுக்கு கோமதி, தனலட்சுமி என்ற 2 மகள்களும், கார்த்திக் என்ற மகனும் உள்ளனர். கார்த்திக்கின் மனைவி சங்கீதா. இவர்களுக்கு ஒரு 6 வயதில் மகள் உள்ளார்.  கோமதிக்கு திருமணமாகி 14 வயதில் மகனும், 12 வயதில் மகளும் உள்ளனர். கருத்து  வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், 2019 மார்ச் மாதம் கார்த்திக் விபத்தில் பலியானார். அதைதொடர்ந்து அக்டோபரில் பணி காலத்தில் ஆறுமுகம் மரணமடைந்தார். இதையடுத்து, தந்தையின் வேலையை கருணை அடிப்படையில் தனக்கு வழங்க கோரி  கோமதியும், மாமனாரின் வேலையை தனக்கு வழங்க கோரி சங்கீதாவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

 இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட  நீதிபதி, கருணை அடிப்படையில் பணி வழங்கவுள்ள நிலையில் இருதரப்பினரும் கலந்துபேசி ஒரு முடிவுக்கு வருமாறு அறிவுறுத்தினார். அதனடிப்படையில் சமாதான பேச்சு நடந்தது. அதில், கோமதிக்கு பணி வழங்க சங்கீதா ஒப்புக்கொண்டார். மாதம் பெறும் சம்பளத்தில் 30 சதவீதத்தை சங்கீதாவுக்கு தர கோமதி சம்மதம் தெரிவித்தார். மேலும், சங்கீதாவின் குழந்தை மேஜராகும் வரை அதன் படிப்பு செலவாக ஒவ்வோர் ஆண்டும்  மார்ச் இறுதிக்குள் ரூ.20 ஆயிரம் தரவும் கோமதி சம்மதித்தார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி அளித்த தீர்ப்பில், இறந்துபோன ஆறுமுகத்தின் வேலையை கருணை அடிப்படையில் கோமதிக்கு 3 மாதங்களுக்குள் அரசு வழங்க வேண்டும். கோமதியின் மாத சம்பளத்தில் 30 சதவீதத்தை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சங்கீதாவின் கணக்கில் வரவு வைக்க வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை  முடித்துவைத்தார்.

Tags : iCourt , Village Assistant Death Mercy Working Daughter-In-Law During Duty? Strange case in iCourt
× RELATED 2021-ல் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில்...