×

தளர்வுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் காசிமேடு, சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட்களில் மீன் மொத்த விற்பனை: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் வரும் 14ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி  சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மீன் விற்பனை வளாகங்கள் மற்றும் இறைச்சி கூடங்கள் மொத்த வியாபாரத்திற்காக மட்டும் செயல்பட அனுமதிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட சிந்தாதிரிப்பேட்டை மீன் அங்காடி வளாகம் மொத்த மீன் விற்பனைக்காக மட்டும் திறக்கப்படும் போது அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய கோவிட் தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.

அப்போது  காவல் துறை அதிகாரிகள் மற்றும் மீன் வியாபார சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசித்து, அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் அனைவரும் பின்பற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் அத்தகைய வியாபாரிகளுக்கு விற்பனை மேற்கொள்ள தடை விதிக்கப்படும். மேலும் வார்டு 62, சிங்கன்னா தெருவில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமில் சிந்தாதரிப்பேட்டை மீன் அங்காடி வியாபாரிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் எனவும், மீன் வியாபரிகளிடம் சிந்தாதிரிப்பேட்டை மீன் வளாக அங்காடிகளுக்கு வரும் வியாபாரிகள் அனைவரும் அடுத்த ஒரு வாரகாலத்திற்குள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

அதைத் தொடர்ந்து தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட காசிமேடு மீன்பிடி துறைமுக வளாகத்தில் அரசின் வழிகாட்டுதலின்படி மொத்த மீன் வியாபாரம் துவங்கவுள்ள நிலையில் காவல்துறை, மீன்வளத்துறை மற்றும் மீன்விற்பனை அங்காடி பிரதிநிதிகளுடன் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது காசிமேடு மீன்பிடி துறைமுக வளாகத்தில் அரசின் வழிகாட்டுதலின்படி, மொத்த மீன் வியாபாரத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் மீன்பிடி வளாகம் திறக்கப்படும் போது அங்கு பின்பற்றப்பட வேண்டிய கோவிட் தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் மீனவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்தும், மீன்வள துறை அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள் மற்றும் மீன் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது வடசென்னை எம்.பி கலாநிதி வீராசாமி, ஆர்.கே.நகர் எம்எல்ஏ எபிநேசர், கூடுதல் காவல் ஆணையர் கண்ணன், கூடுதல் காவல் ஆணையர் செந்தில்குமார், தமிழ்நாடு மீன்வளர்ச்சி துறை கூடுதல் ஆணையர் சஜ்ஜன்சிங் ஆர் சவான், காவல் இணை ஆணையர் துரைகுமார், திருவல்லிகேணி காவல் துணை ஆணையர் பகலவன், மண்டல அலுவலர் துணை ஆணையர் விஷு மகாஜன், வட்டார துணை ஆணையர் ஆகாஷ், வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் சுப்புலட்சுமி  உட்பட பலர் உடன் இருந்தனர்.

Tags : Kasimedu ,Chintadripet , Wholesale of fish in Kasimedu and Chintadripet markets as curfew has been relaxed: Corporation Commissioner inspects
× RELATED காசிமேடு அருகே மீன் பிடித்தபோது...