×

7 தமிழர்கள், முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்: சட்டத்துறை அமைச்சரிடம் எஸ்டிபிஐ வலியுறுத்தல்

சென்னை: ஏழு தமிழர்கள் மற்றும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லைமுபாரக் சட்டத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், தமிழக சட்டத்துறை அமைச்சர் அமைச்சர் எஸ்.ரகுபதியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: 28 ஆண்டுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் 7 தமிழர்கள் உட்பட 10 ஆண்டுகள் சிறைவாசம் கழிந்த ஆயுள் சிறைவாசிகளை, குறிப்பாக முஸ்லிம் சிறைவாசிகளை கருணையின் அடிப்படையிலும், நீதியின் அடிப்படையிலும், பாரபட்சம் பாராமல் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.

கடந்த காலத்தில் சிறைவாசிகள் விடுதலையில் நிகழ்த்தப்பட்ட பாரபட்சங்கள் கடந்து, மாநில அரசு தன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி  கருணை அடிப்படையில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள், ஏழு தமிழர்கள் உட்பட 10 ஆண்டுகள் கழித்த அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும், பாரபட்சம் பாராமல் விடுதலை செய்ய வேண்டும். மேலும், பாரபட்சமின்றி நெருக்கடிகள் இல்லாத பரோல் நடைமுறையையும் அவர்களுக்கு சாத்தியமாக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கோரிக்கையை பரிசீலிப்பதாக  உறுதியளித்ததாக நெல்லை முபாரக் தெரிவித்தார்.


Tags : Tamils ,STBI , 7 Tamils, Muslim life prisoners should be released on mercy: STBI urges Law Minister
× RELATED தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்