ஊரடங்கால் 45 நாட்களாக இயக்கப்படாததால் ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு ரூ.100 கோடி வருவாய் இழப்பு: வங்கி வட்டி தள்ளுபடி, காலாண்டு வரி ரத்து செய்ய வலியுறுத்தல்

சேலம்:  தமிழகத்தில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள், பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. ஆம்னி பஸ் தொழிலை நம்பி டிரைவர்கள், கிளீனர்கள், மோட்டார் வாகன பராமரிப்பாளர்கள் என்று ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். இந்த நிலையில் கடந்தாண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட கொரோனா தொற்றால் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த காலக்கட்டங்களில் ஆம்னி பஸ்கள் முழுமையாக இயக்கப்படவில்லை. பஸ் உரிமையாளர்களுக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. இத்தொழிலை நம்பி இருந்த டிரைவர், கிளீனர், தொழில்நுட்ப உதவியாளர்கள் வருவாய் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

கடந்த அக்டோபரில் கொரோனா தொற்று ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தவுடன் மீண்டும் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று பயத்தால் பஸ்சில் பயணம் செய்ய தயக்கம் காட்டினர். இதனால் ஆம்னி பஸ்களில் எதிர்பார்த்த அளவில் வருவாய் இல்லாமல் போனது. கடந்த புத்தாண்டு, பொங்கல் பண்டிகையில் தான் நிலைமை சற்று சீராக தொடங்கியது. கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா 2வது அலை வேகமாக பரவியதால், ஆம்னி பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை சரிந்தது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் ஏப்ரல் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை இரு வாரத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர், அடுத்தடுத்து ஊரடங்கால் ஆம்னி பஸ்கள் முழுமையாக இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.

கடந்த 24ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சுமார் ஒன்றரை மாதமாக ஆம்னி பஸ்கள் இயக்கப்படாததால், ஆம்னி பஸ்கள் உரிமையாளர்கள் மற்றும் அதனை சார்ந்துள்ள தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உரிமையாளர்கள் தெரிவித்தனர். இது குறித்து சேலத்தை சேர்ந்த ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கூறுகையில், பஸ் ஒரு நாள் ஓடினாலும் காலாண்டு வரி செலுத்த வேண்டும். மேலும் ஓராண்டுக்குண்டான இன்சூரன்ஸ் தொகை கட்ட வேண்டும். வங்கிக்கடனுக்கு வட்டி, அசல் செலுத்த வேண்டும். இத்தனைக்கு மத்தியில் தான் ஆம்னி பஸ்களை இயக்கி வருகிறோம். ஆண்டுக்கு ஒரு பஸ்சுக்கு ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. கொரோனா தொற்றால் கடந்த ஓராண்டாக ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு வருவாய் இல்லாமல் உள்ளது.

கொரோனா 2வது அலை காரணமாக கடந்த ஏப்ரல் 10ம் தேதி முதல் இன்று வரை பஸ்கள் அனைத்தும் இயக்கப்படாமல் இருந்தாலும்,  காலாண்டு வரி, இன்சூரன்ஸ், வங்கிக்கடன் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனால் பல உரிமையாளர்கள் தொழிலை இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த 45 நாட்களில் மட்டும் ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு ரூ.100 கோடி அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே போக்குவரத்துத் துறை காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும். வங்கிகள் வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். இன்சூரன்சில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இதை எல்லாம் அரசு செய்தால் தான், ஊரடங்கு தளர்வுக்கு பிறகு ஆம்னி பஸ் மீண்டும் இயக்கப்படும்” என்றனர்.

Related Stories:

>