×

மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக கொரோனா பாதித்த மாமனாரை தோளில் சுமந்து சென்ற மருமகள்: அசாம் மாநிலத்தில் நெகிழ்ச்சி

கவுகாத்தி: அசாமில் கொரோனா பாதித்த மாமனாரை தனது தோளில் சுமந்து சென்ற மருமகள் நிஹாரிகாவை பலரும் பாராட்டி வருகின்றனர். அசாம் மாநிலம் ரஹாவ் அடுத்த பட்டிகானை சேர்ந்த துலேஷ்வர் தாஸின் (75) மகன் சூரஜ் நகரில் பணியாற்றி வருகிறார். அதனால், அவரது மருமகள் நிஹாரிகா, தனது மாமனாரை கவனித்துக்கொள்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன், துலேஷ்வர் தாஸூக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. ​அவரை மருத்துவமனையில் அனுமதிக்க மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். மருத்துவமனையானது, அவர்களது வீட்டிலிருந்து சிறிது தொலைவில் இருந்தது. வாகனங்கள் ஏதும் வராததால், கொரோனாவால் பாதித்த தனது மாமனாரை, நிஹாரிகா தனது தோள்களில் சுமந்துகொண்டு மருத்துவமனையில் சேர்த்தார். அடுத்த சில நாட்களில் நிஹாரிகாவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

மாமனார் துலேஷ்வர், மாவட்ட கொரோனா வார்டின் பராமரிப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருமகள் நிஹாரிகா வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டார். ஆனால், நிஹாரிகா தனது மாமனாரை மருத்துவமனையில் விட்டுவிட்டு வீட்டிற்கு செல்ல தயாராக இல்லை. அதன்பின்னர் நிஹாரிகாவை சமாதானப்படுத்திய டாக்டர் சங்கீதா தார் மற்றும் சுகாதார பணியாளர் பிந்து ஹிரா ஆகிய இருவரும், ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் புக்னானி சிவில் மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டுக்கு துலேஷ்வரை அனுப்பி வைத்தனர்.  மருமகள் நிஹாரிகா, தற்போது வீட்டுத் தனிமையில் இருந்து வருகிறார். இந்நிலையில், தனது வயதான மற்றும் கொரோனாவால் பாதித்த மாமனாருக்கு நிஹாரிகா செய்த பணிவிடையை உள்ளூர் மக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். மாமியார், மருமகள் இடையே சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமா? இல்லையா? என்று இன்னும் பட்டிமன்றம் நடந்து வரும்நிலையில், தனது கடமையில் இருந்து தவறாத நிஹாரிகா போன்ற மருமகளை சமூக ஊடகங்களிலும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Tags : Assam , Daughter-in-law carrying corona-infected father-in-law on shoulder to be admitted to hospital: Flexibility in Assam
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...