×

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணியை விரைவுபடுத்த கோரி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

சென்னை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணியை விரைவுபடுத்த கோரி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். பணிகளை செயல்படுத்த அலுவலர்களுக்கு குழு அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டப்பட்டு 5 ஆண்டுக்கும் மேலாகிறது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு 2015-ம் ஆண்டு அறிவித்தது. மதுரை, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, 2019 ஜனவரி 27ஆம் தேதியன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதனிடையே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக்குழு உறுப்பினர்களாக ரவீந்திரநாத் எம்.பி., மாணிக்கம் தாகூர் எம்.பி. ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போதும் திமுக இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தது. இந்நிலையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், மதுரையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்குவதற்காக 27-1-2019 அன்று பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது. இம்மருத்துவமனைக்காக தலைவர் மற்றும் செயல் இயக்குநர் நியமிக்கப்பட்டு, சில குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கான நிலம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட நிலையில், இவ்விடத்தில் மருத்துவமனை மற்றும் கல்லூரி வளாகத்திற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இப்பணிகளை விரைந்து தொடங்க வேண்டுமென்றும், இதற்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்குப் பணிகளைச் செயல்படுத்துவதற்கான முழு அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டுமென்றும் கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Chief Minister ,PM ,AIMS Hospital ,Maduro , madurai,aiims
× RELATED தமிழ்நாட்டுக்கு எதையும் தராத...