×

மஹாராஷ்டிராவில் கரும்பூஞ்சை நோய் சிகிச்சைக்கு 3 வகையான கட்டணங்களை நிர்ணயித்து உத்தவ் தாக்கரே அரசு உத்தரவு..!!

மும்பை: மஹாராஷ்டிராவில் கரும்பூஞ்சை நோய் சிகிச்சைக்கு 3 வகையான கட்டணங்களை அம்மாநில அரசு நிர்ணயித்துள்ளது. மஹாராஷ்டிராவில் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவோரை காப்பாற்ற, அனைவருக்கும் தரமான சிகிச்சை அளிக்க உத்தவ் தாக்கரே அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி கரும்பூஞ்சை நோய்க்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற மூன்று வகையில் கட்டணம் நிர்ணயித்துள்ளது. முதல்நிலை நகரங்கள் ஏ என்றும் இரண்டாவது நிலையில் உள்ள நகரங்கள் பி மற்றும் இவை நீங்கலாக உள்ள மற்ற நகரங்கள் சி நகரங்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டு அதற்கேற்ப கரும்பூஞ்சை நோய்க்கான சிகிச்சை கட்டணத்தை அரசு நிர்ணயித்திருக்கிறது.  


ஏ வகை நகரங்களில் தனி வார்டில் சிகிச்சை கட்டணம் 4,000 ரூபாய், பி வகை நகரங்களில் 3,000 ரூபாய், சி வகை நகரங்களில் 2,400 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே வெண்டிலேட்டர் வசதியுடன் தீவிர சிகிச்சை பிரிவு என்றால் 7,500 ரூபாய், ரூ.5,500 மற்றும் 4,500 ரூபாய் கட்டணமாக செலுத்தவேண்டும். வெண்டிலேட்டர் வசதியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்க ஏ வகை நகரம் என்றால் 9,500 ரூபாய் கட்டணம்.


  பி வகை நகரத்தில் 6,700 ரூபாயும், சி வகை நகரத்தில் 5,400 ரூபாயும் கரும்பூஞ்சை சிகிச்சை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மும்பை மற்றும் அதனை ஒட்டிய தானே, நவிமும்பை, கல்யான்டோப்பி வாலி, புனே, நாக்பூர் உள்ளிட்ட நகரங்கள் ஏ வகை நகரங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்ட தலைநகரங்கள் அனைத்தும் பி வகை நகரங்களாகவும், இவை நீங்கலாக மற்ற நகர்ப்புறங்களை சி வகை நகரங்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மஹாராஷ்டிராவில் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : Utav Thakare Government ,Maharashtra , Maharashtra, Black Fungus, Fees, Uttam Thackeray
× RELATED பேருந்தும், லாரியும் மோதி விபத்து: 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!