×

மாநில குற்றவியல் தலைமை வக்கீலாக அசன் முகமது ஜின்னா நியமனம்

சென்னை: தமிழக அரசின் மாநில குற்றவியல் தலைமை வக்கீலா அசன் முகமது ஜின்னா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.   சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெறும் குற்ற வழக்குகளில் மாநில அரசு தரப்பில் ஆஜராக தலைமை குற்றவியல் வக்கீல் நியமிக்கப்படுவார்கள். இவர்களுக்கு உதவியாக கூடுதல் குற்றவியல் வக்கீல்கள் நியமிக்கப்படுவார்கள். உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் காவல்துறை சார்பில் இவர்கள் ஆஜராவார்கள். சில முக்கிய வழக்குகளில் செஷன்ஸ் நீதிமன்றங்களிலும் மாநில குற்றவியல் வக்கீல்கள் ஆஜராவார்கள்.
 கடந்த அதிமுக ஆட்சியின்போது மாநில குற்றவியல் வக்கீலாக மூத்த வக்கீல் என்.நடராஜன் பதவி வகித்து வந்தார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் புதிய குற்றவியல் தலைமை வக்கீல் நியமிக்கும் நடைமுறைகள் தொடங்கின. மாநில குற்றவியல் வக்கீல் நியமனத்தில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனைவரின் ஒப்புதலும் பெறப்பட வேண்டும். அதன் பிறகுதான் அரசாணை பிறப்பிக்க முடியும்.

இந்த நிலையில், தமிழக மாநில தலைமை குற்றவியல் வக்கீலாக அசன் முகமது ஜின்னாவை நியமனம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அசன் முகமது ஜின்னா 2006-2011 திமுக ஆட்சியின்போது கூடுதல் குற்றவியல் வக்கீலாக ஆஜராகி வந்தார். கிரிமினல் வழக்குகளில் நல்ல திறமை பெற்றவர். பரபரப்பை ஏற்படுத்திய மாணவி சரிகா ஷா ஈவ்டீசிங் வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்தவர்.  இதேபோல்  பல முக்கிய வழக்குகளில் குற்ற வழக்குகளில் அரசுத்தரப்பில் ஆஜராகியுள்ளார். ஐநாவின் யுனஸ்கோ (மனித உரிமைகள் தகவல் தொழிநுட்ப பிரிவு) ஆசிய-பசிபிக் பிராந்திய ஆலோசகராக நியமிக்கப்பட்டவர். திமுக மாநில இளைஞரணி துணை செயலாளராக பதவி வகித்து வருகிறார். தமிழ்நாடு வக்ஃப் போர்டு, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ)  ஆகியவற்றின் வக்கீலாக ஆஜராகியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம், அத்திக்கடை கிராமத்தில் 1977லே அசன் முகமது ஜின்னா பிறந்தார். இவரது தந்தை அசன் முகமது நாகை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் அரசு குற்றவியல் வக்கீலாக பணியாற்றியவர். அசன் முகமது ஜின்னா திருவாரூரில் பள்ளிப்படிப்பை முடித்து சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் 1999ல் பட்டம் பெற்றார். பின்னர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் முதுநிலை பட்டத்தை பெற்றார்.

Tags : Assan Mohammad Jinnah , Assan Mohammad Jinnah has been appointed as the state's chief criminal prosecutor
× RELATED நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார்...