×

தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா பாதித்தால் புதிய அறிகுறிகள் காதுகளில் இரைச்சல் ஏற்படும் கழுத்து, அக்குளில் வீக்கம் வரும்: விஞ்ஞானிகள் ஆய்வில் புதிய தகவல்

லண்டன்: கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டால், அவர்களுக்கு இதுவரையில் இல்லாத வகையில் புதிய அறிகுறிகள் தென்படுகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது.  உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒரே தீர்வு தடுப்பூசிதான் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர். இதனால், அமெரிக்க, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளை தயாரித்து ஏற்றுமதி, இறக்குமதி செய்து வருகின்றன. பல நாடுகளில் மருந்து நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு, உற்பத்தியை உள்நாட்டிலேயே தயாரித்து வருகின்றன. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் 2வது டோஸ் போட்ட பல்லாயிரம் பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் பல ஆயிரம் பேர் இவ்வாறு பாதித்துள்ளனர். இது பற்றி லண்டன் கிங்ஸ் கல்லூரியில் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, 11 லட்சம் மக்களிடம் நடந்த ஆய்வில் முதல் டோஸ் போட்டவர்கள் 0.2%, 2வது டோஸ் போட்ட 0.3% பேர் தொற்றால் பாதிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.

வழக்கமாக கொரோனா பாதித்தவர்களுக்கு இருமல், சளி, காய்ச்சல், வயிற்றுப் போக்கு போன்றவை அறிகுறிகளாக உள்ளன. ஆனால்,  தடுப்பூசி போட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் வித்தியாசமாக 4 புதிய அறிகுறிகள் தென்படுவது உறுதியாகி இருக்கிறது.  அதன் விவரம் வருமாறு: தும்மல்: கொரோனா தொற்று உறுதியான பெரும்பாலானவர்களுக்கு பொதுவாக இருக்கும் அறிகுறி தும்மல். தடுப்பூசி போட்ட 60 வயதுக்கும் கீழ் உள்ளவர்களின் 24%  மக்களுக்கு தும்மல் அறிகுறியால் பாதித்துள்ளனர். மூச்சுத் திணறல்: இந்த அறிகுறி மிக முக்கியமானது. தடுப்பூசி போட்ட மக்களும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்படுகின்றனர். இந்த அறிகுறி இருந்தால் நோயாளிகள் மூச்சு விட மிகவும் கஷ்டப்படுவார்கள். காது இரைச்சல்: காதில் ஏதேனும் ஒலிக்கும் சத்தம் கேட்டால், கொரோனா அறிகுறிதான். தடுப்பூசி போட்ட பிறகு தொற்றால் பாதித்த பெரும்பாலானோருக்கு இந்த அறிகுறி இருக்கிறது.  வீக்கம்: தடுப்பூசி போட்ட மக்களுக்கு பக்க விளைவாக கழுத்து, அக்குள் பகுதியில் வீக்கம் ஏற்படுகிறது. இது ஒன்று அல்லது 2 நாட்களில் சரியாகி விடும். ஆனால், அந்த வீக்கம் தொடர்ந்தால் அது கொரோனா பாதித்ததற்கான அறிகுறியாக கருதப்படுகிறது.

ஸ்புட்னிக் தயாரிக்க சீரத்துக்கு அனுமதி
இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்து வழங்கி வரும் சீரம் நிறுவனம், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை தயாரிக்கவும், அதன் பரிசோதிப்புக்கு உட்படுத்தவும் அனுமதி அளிக்கும்படி மத்திய அரசிடம் விண்ணப்பித்து இருந்தது. இதற்கு நேற்று, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்தது.

குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை
உலக சுகாதார அமைப்புகளின் உயர் தடுப்பூசி நிபுணர் கேட் ஓபைரன் கூறுகையில், ‘‘பல பணக்கார நாடுகள் எல்லாம் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு தடுப்பூசிகள் போடுவதில் முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், கொரோனா வைரசுக்கு எதிராக குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிப்பதில் உலக சுகாதார அமைப்பு அதிக முன்னுரிமை அளிக்கவில்லை,’’ என்றார்.

உலக நாடுகளுக்கு 2.5 கோடி தடுப்பூசி வழங்கும் அமெரிக்கா
கோவாக்ஸ் உலகளாவிய தடுப்பூசி பகிர்வு திட்டத்தின் மூலம் அமெரிக்காவில் பயன்படுத்தப்படாமல் உள்ள 2.5 கோடி டோஸ் தடுப்பூசிகளை, பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு வழங்க அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 60 லட்சம் தடுப்பூசிகள் தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகிறது. 70 லட்சம் தடுப்பூசிகள் இந்தியா, நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு வழங்கப்படுகிறது. ஜூன் மாத இறுதிக்குள் உலகளவில் 8 கோடி தடுப்பூசிகளை அமெரிக்கா வழங்க உள்ளது. இதில், அதிகளவு தடுப்பூசிகள் இந்தியாவுக்கு வழங்கப்பட உள்ளது.

தினசரி பாதிப்பு  1.32 லட்சமாக சரிவு
* கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,32,364 பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது.
* கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 2 கோடியே 85 லட்சத்து 74 ஆயிரத்து 350 ஆக உள்ளது.
* ஒரேநாளில் புதிதாக 2 ஆயிரத்து 713 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,40,702.
* ஒரே நாளில் 2,07,071 பேர் குணமடைந்தனர். குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 65 லட்சத்து 97 ஆயிரத்து 655.
* மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றோரின் எண்ணிக்கை 16 லட்சத்து 35 ஆயிரத்து 993 பேர்.


Tags : New symptoms of corona infection in vaccinated people include swelling in the ears and neck and armpits: new research from scientists
× RELATED பர்கினோ பாசோவில் அரசுக்கு எதிராக...