×

உலக கோப்பை தகுதிச்சுற்று கால்பந்து கத்தாரிடம் போராடி தோற்றது இந்தியா

தோஹா: உலக கோப்பை தகுதிச்சுற்று கால்பந்து போட்டியில் இந்திய அணி கடுமையாகப் போராடி  0-1 என்ற கோல் கணக்கில் கத்தாரிடம் தோற்றது. உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு கத்தாரில் நடைபெற உள்ளது.  அதற்காக ஆசிய அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள்  2019ல் தொடங்கியது. ஈ பிரிவில்  இந்தியா, கத்தார், ஓமன், ஆப்கானிஸ்தான், வங்கேதசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியுடனும் தலா 2 ஆட்டங்களில் மோத வேண்டும்.  நேற்று முன்தினம் மாலை வரை இந்தியா 5  ஆட்டங்களில் விளையாடி 3ல் டிரா, 2ல் தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் இருந்தது.  இந்நிலையில் கொரோனா பீதி காரணமாக கடந்த ஆண்டு எந்த ஆட்டமும் நடைபெறவில்லை. இங்கு பரவல் அதிகமாக  இருப்பதால் இந்தியாவில் நடைபெற வேண்டிய 2 ஆட்டங்கள் உட்பட  இந்தியா ஆட வேண்டிய எஞ்சிய 3 ஆட்டங்களும் கத்தாரின் தோஹாவில்  நடக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு   இந்தியா-கத்தார் அணிகள் மோதின. நடப்பு  ஆசிய சாம்பியனான கத்தார்  ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தியது.  

ஆட்டத்தில் 75 சதவீத நேரம் பந்து கத்தார் வசம்தான் இருந்தது. இந்தியாவின் கோல் ஏரியாவை  38 முறை  முற்றுகையிட்டு கத்தார்  கோலடிக்க முயன்றது.  அதில் 10 முறை சரியாக கோலை நோக்கி அடித்தது. அதில் ஆட்டத்தின் 33வது நிமிடத்தில்  அப்துல் அசிஸ் அடித்த பந்து கோலானது.  இந்தியா ஒரே ஒருமுறை மட்டும் கோலடிக்க முயன்றது. அதுவும்  கோலை நோக்கி  போகவில்லை. ஆனாலும் அடுத்த கோல் விழாமல் இருக்க இந்திய அணி வீரர்கள் போராட்டம் நடத்தினர். அதிலும் கோல்கீப்பர் குர்பிரீத் சிங்  தடுப்புச்சுவர் போல் நின்று கத்தார் முயற்சிகளை முறியடித்தாார். அதனால் ஆட்டத்தின் முடிவில்  கத்தார் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.  ஈ பிரிவில் கத்தார் தொடர்ந்து முதலிடத்திலும், இந்தியா  4வது இடத்திலும் நீடிக்கிறது. இந்தியா அடுத்து ஜூன் 7ம் தேதி  வங்கதேசத்துடனும், ஜூன் 15ம் தேதி  ஆப்கானிஸ்தானுடனும் மோதுகிறது.  தொடர் குவாரன்டைன், நீண்ட நாள் விளையாடாதது போன்ற காரணங்களால் இந்திய வீரர்கள் தடுமாற்றத்துடன் இருக்கின்றனர். வலுவான கத்தார் அணியுடன் நடந்த முதல் சுற்று ஆட்டம் 0-0 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது குறிப்பிடத்தக்கது.



Tags : India ,World Cup ,Qatar , India loses World Cup qualifier to Qatar
× RELATED நரேந்திர மோடி மைதானத்தில்...