போக்குவரத்து நெரிசல் பற்றி கவலையில்லை வருகிறது ‘காப்டர் பேக்’ ஹெலிகாப்டர் முதுகில் அணிந்து ஜாலியா பறக்கலாம்: ஆஸி.யில் சோதனை வெற்றி

சிட்னி:  ‘காப்டர் பேக்’ எனப்படும் முதுகில் பொருத்திக் கொண்டு  பறந்து செல்லும் ஹெலிகாப்டரின் சோதனை, ஆஸ்திரேலியாவில்  வெற்றிகரமாக நடந்துள்ளது. திரைப்படங்கள், கார்ட்டுன்களில் மட்டும்தான் ஒருவர் புகை கக்கும் கரவியை முதுகில் கட்டிக் கொண்டு வானத்தில் ‘சர்புர்’ என பறக்கும் சீன்கள் இடம் பெறும். இதை பார்த்து குழந்தைகள் குலுாகலிப்பார்கள். அதேபோல், நிஜத்திலும் இப்போது மனிதர்கள் தனியாக பறக்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதற்கு ‘காப்டர் பேக்’ என பெயரிடப்பட்டு உள்ளது. ஹெலிகாப்டரில் பயன்படுத்தப்படும் மோட்டார், சுழலும் கற்றாடியில் (ரோட்டார்) இயங்கக் கூடியதாக இது உருவாக்கப்பட்டு உள்ளது. இதனை முதுகில் பொருத்திக் கொண்டு  தரையில் சிறிது தூரம் நடந்து சென்று இயக்கினால், சர்ரென விண்ணில் பாயும்.  ஆஸ்ரேலியாவின் கடற்கரையில் சமீபத்தில் இந்த ‘காப்டர் பேக்’ ஹெலிகாப்டரில் ஒருவர் பறந்து சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. அதில், காப்டர் பேக் ஹெலிகாப்டர் தரையில் இருந்து பறந்து அதை இயக்கியவரை உயரத்துக்கு  எடுத்து செல்கிறது.

 அவர் தலையில் ஹெல்மெட்டும், உடலில் பாதுகாப்பு  கவசத்தையும் அணிந்துள்ளார். மேலும், பறந்து செல்பவரின் உடலில் பாராசூட்டும் இணைக்கப்படுகிறது. அசம்பாவிதம் ஏற்பட்டு ஹெலிகாப்டர் கீழே விழும் நிலை ஏற்பட்டால், இந்த பாராசூட் உடனடியாக விரிந்து உயிரை காப்பாற்றும். இந்த ஹெலிகாப்டர் கார்பன் பைபரால் அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் அதிகமாகி விட்ட நிலையில், ஏற்கனவே தனிநபர்கள் வானத்தில் பறக்கும் சாதனங்களை உருவாக்கும் முயற்சி உலகம் முழுவதும் நடந்து வருகிறது. அதில், இந்த ஹெலிகாப்டர் சற்று நம்பகத்தன்மை கொண்டதாக இருப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த காப்டர் பேக் ஹெலிகாப்டர், சமூக வலைதளங்களில்  வைரலாகி, மக்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

Related Stories:

>