அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி: அனைத்து கட்சியினர் கருத்து கேட்டு பிளஸ் 2 தேர்வு குறித்து அறிவிப்பு

சென்னை:   மாவட்ட முதன்மைக் கல்வி அலுவர்களின் ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:  தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு  நடத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி இன்று சட்ட மன்ற பிரதிநிதிகள் கூட்டம் காணொலி மூலம் நடக்கும். மருத்துவர்கள், உளவியல் வல்லுநர்கள் ஆகியோரிடம் ஆலோசனை கேட்க உள்ளோம். அதற்கு பிறகு  முடிவு எடுக்கப்படும். பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், டெல்லி, குஜராத் போன்ற மாநிலங்கள் தான் தேர்வு வேண்டாம் என்று தெரிவித்துள்ளன.  ஆனால் அவர்கள் யாரும் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. மாநிலங்களின் கருத்தையும் தமிழக முதல்வர் உன்னிப்பாக கவனித்து வருகிறார். இதையெல்லாம் திரட்டிய பிறகு தான் முதல்வர் தனது முடிவை அறிவிப்பார்.  தேர்வை நடத்தாவிட்டால் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் உயர்கல்விக்கு எப்படிப்  போவார்கள். அந்த மதிப்பெண்களை எடுத்து செல்வார்கள். நீட் தேர்வையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. தேசிய தேர்வு முகமை நுழைவுத் தேர்வை கொண்டு வந்துவிடுமோ என்ற அச்சமும் இருக்கிறது.

 பிளஸ் 2 தேர்வை நடத்துவது என்று முடிவு செய்தால், உடனடியாக தேர்வு தேதி அறிவிக்கமாட்டோம். அதற்கான கால அவகாசம் அளிக்கப்படும். நீட் தேர்வை கண்டிப்பாக உள்ளே விடமாட்டோம் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அது குறித்து சட்ட மன்றம் கூடும் போது முதல்வர் அறிவிப்பார்.  இது வரை பெற்றோரிடம் கருத்து கேட்டதில் ஒவ்வொரு மாவட்டத்தில்  இருந்தும் ஒவ்வொரு மாதிரியாக கருத்துகள் வந்துள்ளன.  ஆன்லைன் வகுப்புகள் குறித்து  அமைக்கப்பட்ட குழுவிடம் பெறப்பட்ட கருத்துகளின் பேரில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தயாராக உள்ளது. 7ம் தேதி அதை முதல்வரிடம் கொடுத்து ஒப்புதலை பெற்று அந்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்.   தனியார் பள்ளி ஆசிரியர்களை பொருத்தவரையில் போதிய ஊதியம் இல்லாமல் வெளியிடங்களுக்கு வேலைக்கு செல்லும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம்.

பிளஸ் 2 தேர்வு குறித்து முடிவெடுத்த பிறகு தனியார் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகள் மீது உரிய தீர்வு காணப்படும். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கீடு தொடர்பாக பல்வேறு ஆப்ஷன்கள் ஆலோசிக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான முடிவுகளும் அறிவிக்கப்படும். தனித் தேர்வர்களுக்கு கட்டாயம் தேர்வு  நடத்தப்படும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். நீட் தேர்வை ஏன் மத்திய அரசு ரத்து செய்யவில்லை என்பது குறித்து பல கட்சியினர் கேட்டு வருகின்றனர். அது தொடர்பாகவும்  கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளோம்.

Related Stories:

>