×

நாட்டு மக்கள் அனைவருக்கும் தினமும் 1 கோடி தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்: குடியரசு தலைவருக்கு கே.எஸ்.அழகிரி கடிதம்

சென்னை: நாட்டு மக்கள் அனைவருக்கும் தினமும் 1 கோடி தடுப்பூசிகள் வீதம் இலவசமாக போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய குடியரசு தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:  அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி மட்டுமே பாதுகாப்பு. ஆனால், தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கான முதல் ஆர்டரை கடந்த ஜனவரி மாதம் தான் கொடுத்தனர். கிடைத்திருக்கும் வெளிப்படையான தகவல்களின்படி, 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், மோடி அரசும் மாநில அரசுகளும் சேர்ந்து இன்று வரை  வெறும் 39 கோடி தடுப்பூசிகளை மட்டுமே ஆர்டர் செய்துள்ளன.2021 மே 31ம் தேதி வரை, 21 கோடியே 31 லட்சம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால், 4 கோடியே 45 லட்சம் பேருக்கு  மட்டுமே இருமுறை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், வயதானவர்களுக்கு தடுப்பூசி போட்டு முடிப்பதற்கு 3 ஆண்டுகள் ஆகிவிடும்.

சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு ஒரு டோஸ் விலை மோடி அரசுக்கு 150, மாநில அரசுகளுக்கு 300 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு 600 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஒரு டோஸ் மோடி அரசுக்கு 150, மாநில அரசுகளுக்கு 600 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு 1,200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாறுபட்ட விலையை நிர்ணயித்து, மக்களின் துயரத்திலிருந்து லாபம் சம்பாதிக்க மோடி அரசே துணைபோகிறது. மத்திய பா.ஜ. அரசே தடுப்பூசி டோஸ்களை கொள்முதல் செய்து அதனை மாநில அரசுகளுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் இலவசமாக வழங்கி மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்பதே காலத்தின் தேவையாக இருக்கிறது. தற்போது தினமும் 16 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவது போல் இல்லாமல், தினமும் குறைந்தது 1 கோடி பேருக்கு தடுப்பூசி போட்டால் மட்டுமே இதற்கு தீர்வு. எனவே, தினமும் 1 கோடி தடுப்பூசியை இலவசமாகப் போட மோடி அரசுக்கு உத்தரவிட  உங்களைக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : President of the Republic S. Brunette , KS Alagiri's letter to the President of the Republic: Action should be taken to vaccinate 1 crore people daily
× RELATED தினமும் பொய் பேசும் அரசியல் காமெடியன் அண்ணாமலை: திருமாவளவன் விளாசல்