×

தடுப்பூசி செலுத்திக்கொண்டபின் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை: எய்ம்ஸ் மருத்துவமனை ஆய்வில் தகவல்

டெல்லி: தடுப்பூசி செலுத்திக்கொண்டபின் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் யாரும் இதுவரை உயிரிழக்கவில்லை என்று ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாலும், உயிரிழப்பு ஏற்படுகிறதா என்பது குறித்து முதல் முறையாக நடத்தப்பட்ட ஆய்வில், இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் தடுப்பூசி இரு டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்களா என்பதை இந்த ஆய்வு முக்கியமாக குறிப்பிடுகிறது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் டெல்லியில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 63 பேரிடம், அவர்கள் தொற்றுக்கு ஆளானபின் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 36 பேர் இரு டோஸ்களையும் போட்டுக்கொண்டவர்கள், 27 பேர் ஒரு டோஸ் தடுப்பூசி மட்டும் எடுத்தவர்கள். 10 பேர் கோவிஷீல்ட் தடுப்பூசியும், 53 பேர் கோவாக்ஸின் தடுப்பூசியும் போட்டுக்கொண்டனர். இதில் 41 பேர் ஆண்கள், 22 பேர் பெண்கள். இதில் யாருக்கும் இணை நோய்கள் இல்லை.

டெல்லியில் பெரும்பாலும் உருமாறிய கொரோனா வைரஸ் பி.1.617.2, பி.1.1.7 ஆகிய வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த இரு தடுப்பூசிகளும் இந்த வைரஸ்களுக்கு எதிராக எவ்வாறு செயல்படுகிறது, பிரதி எடுக்கிறது, மரபணு வரிசையைப் பயன்படுத்துகிறது என்பதைப் பற்றி ஆய்வு செய்யப்பட்டது. தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டாலும், தீவிரமான அறிகுறிகளால் பாதிக்கப்படவில்லை. நோயின் தீவிரமும் அதிகமாகவில்லை, உயிரிழப்பும் ஏற்படவில்லை.

தடுப்பூசி செலுத்திக்கொண்ட காலம், எந்தத் தடுப்பூசி எடுத்துக்கொண்டார்கள் என்பதைக் கணக்கில் எடுக்காமல் பார்த்தபோது, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட அனைவருக்கும் வைரஸ் லோடு அதிகமாகத்தான் இருந்தது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு ஏற்பட்டதுபோல் காய்ச்சலும் 5 முதல் 7 நாட்கள் வரை இருந்தது. ஆனால் யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : AIMS Hospital , vaccine
× RELATED ஜம்மு எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி