×

மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ல் தண்ணீர் திறப்பு ; முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவால் விவசாயிகள் மகிழ்ச்சி: குறுவை சாகுபடிக்கு ரெடி

சேலம்: காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து வரும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறந்துவிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால்  மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள் சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர். மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால், சில ஆண்டுகளாக மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைவாக இருப்பதாக கூறி தண்ணீர் திறந்து விடுவதில்லை.

இதனால், குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலை இருந்தது. இந்த நிலையில் நடப்பாண்டில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து கடைமடை வரை தண்ணீர் தங்கு தடையின்றி செல்ல வசதியாக காவிரி ஆறு, கால்வாய், வடிகால்வாய் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

இதையேற்று காவிரியில் தூர்வாரும் பணி மேற்கொள்ள ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. தூர்வாரும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இப்பணிகளை 10 நாட்களுக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மேட்டூர் அணையிலிருந்து 2021-2022ம் ஆண்டிற்கு காவிரி டெல்டா பாசனத்திற்காக வரும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறந்துவிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.   இதனால், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டங்களில் சுமார் 5.21 லட்சம் ஏக்கர் (2.11 லட்சம் ஹெக்டேர்) நிலங்கள் பாசனவசதிபெறும்.   

  மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிக்கும் முழுமையாக சென்று சேரும் வகையில் தூர்வாரும் பணிகளை  விவசாயிகளை கலந்தாலோசித்து இந்தாண்டு முறையாக மேற்கொள்ளப்படுகிறது.  இதன்படி, டெல்டா மாவட்டங்களில் ரூ.65.11 கோடி செலவில் 647 பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதன் மூலம், அனைத்து பகுதி டெல்டா பாசன விவசாயிகளுக்கும் தேவையான அளவு தண்ணீர் கொண்டுசேர்க்க இயலும்.

இந்தாண்டு விவசாயப் பணிகளுக்குத் தேவையான விதை நெல், உரங்கள், பூச்சி மருந்து மற்றும் இதர வேளாண் இடுபொருட்கள் போதுமான அளவு இருப்பில் வைக்கவும் வேளாண் துறை மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாளில் பாசனத்திற்கு தண்ணீர்திறக்கப்படும் என்ற அறிவிப்பால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறுவை சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர்.

நீர்மட்டம் 97 அடி
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று  97.02 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 61.04டி.எம்.சி யாக உள்ளது.


Tags : Mettur Dam ,Chief Minister ,MK Stalin , Water opening on June 12 from Mettur Dam; Farmers happy with Chief Minister MK Stalin's order: Ready to cultivate curry
× RELATED மேட்டூர் அணையை தூர்வாரி கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும்: ஈஸ்வரன்!