×

குஜராத்தில் அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை நோய்!: மருத்துவமனையில் குவியும் நோயாளிகள்..!!

காந்திநகர்: குஜராத்தில் கரும்பூஞ்சை நோயால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. கொரோனாவின் 2வது அலையை தொடர்ந்து கரும்பூஞ்சை நோய் கடும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. நாடு முழுவதும் 12 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு இந்நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் மட்டும் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள்  கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வருபவர்களை விட கரும்பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று கூறப்படுகிறது. 


தற்போது அங்கு 285 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 15 வார்டுகளில் 385 பேர் கரும்பூஞ்சை நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 15 முதல் 20 பேர் இந்நோய் தொற்றால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருவதாகவும், நோய் தொற்றின் வீரியத்தை பொறுத்து நோயாளிகளை பிரித்து சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். கரும்பூஞ்சை நோயால் நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு கண், மூக்கு போன்ற பகுதிகளில் அறுவை சிகிச்சை செய்யப்படுவதால் அறுவை சிகிச்சை முடிந்தவர்கள், அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டியவர்கள் என்று நோயாளிகள் பிரித்து வைக்கப்பட்டுள்ளனர். 


கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும், சிகிச்சை முடிந்த கொரோனா நோயாளிகளுக்கும் கருப்பு பூஞ்சை தாக்கம் ஏற்பட்டு வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் முற்றிலும் குணப்படுத்த முடியும். அவ்வாறு இல்லாமல் கால தாமதமானால் இந்த கருப்பு பூஞ்சை நோய் மூக்கின் வழியாக மூளைக்கு பரவும் வாய்ப்பு அதிகமாகி உயிரிழப்பு கூட நேரிடலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.



Tags : Gujarat , Gujarat, black fungus, hospital, patients
× RELATED சி.எஸ்.கே – குஜராத் அணிகள் மோதும் போட்டி: டிக்கெட் விற்பனை தொடக்கம்