×

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று; கத்தாரிடம் இந்தியா போராடி தோல்வி: 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது

தோகா: 2022ம் ஆண்டு உலக கோப்பை மற்றும் 2023ம் ஆண்டு ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி ‘இ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. கத்தார், ஓமன், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் இந்த பிரிவில் உள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். இதில் இந்தியா ஏற்கனவே 5 போட்டியில் ஆடி 2 தோல்வி, 3 டிரா கண்டிருந்தது. இந்நிலையில் கத்தார் அணியுடன் தோகா நேற்று இரவு மோதியது.

ஆசிய சாம்பியனான வலுவான கத்தாருடன் ஏற்கனவே மோதிய போட்டியில் டிரா கண்டிருந்ததால் நம்பிக்கையுடன் களம் இறங்கியது. விறுவிறுப்புடன் நடந்த இந்த ஆட்டத்தில் சில நிமிடத்தில் இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய வீரர் ராகுல் பெக்கேவுக்கு 9வது நிமிடத்தில் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்ட நிலையில், 17வது நிமிடத்தில் ரெட் கார்டு காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் இந்தியா 10 வீரர்களுடன் ஆடவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் கத்தார் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது.

ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் அந்த அணியின் அப்தெல்அஜீஸ் கோல் அடித்தார். இதனால் 1-0 என முன்னிலை பெற்றது. இந்தியா கடைசி வரை போராடியும் பதில் கோல் அடிக்க முடியவில்லை. இந்திய கோல்கீப்பர் குர்பிரீத், சிறப்பாக செயல்பட்டு கத்தாரின் பல கோல் வாய்ப்புகளை தடுத்தார். இல்லையெனில் அதிக கோல் கணக்கில், கத்தார் வெற்றி பெற்றிருக்கும். 6 போட்டிகளில் ஆடி உள்ள இந்தியா 3 தோல்வி, 3 டிரா என 3 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.

கத்தார் 7 போட்டிகளில் 6 வெற்றி, ஒரு டிரா என 19 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்தியா அடுத்ததாக 7ம் தேதி வங்கதேசத்தையும், 15ம் தேதி கடைசி லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானையும் எதிர்கொள்கிறது.

Tags : World Cup football ,India ,Qatar , World Cup Football Qualifying Round; India lost to Qatar 1-0
× RELATED சில்லி பாய்ன்ட்…