×

வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 250 ஆக்சிஜன் கூடுதல் படுக்கை வார்டு திறப்பு

வேலூர்: வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 250 படுக்கைகள் கொண்ட வார்டை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் இன்று திறந்து வைத்தனர். வேலூர் மாவட்டத்தில் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஜிபிஎச் மருத்துவமனை, குடியாத்தம், பேரணாம்பட்டு, அணைக்கட்டு அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் கோவிட் கேர் மையங்கள், சித்த மருத்துவ மையங்களும் தனியார் பள்ளி, கல்லூரிகள், அரசு பள்ளி, கல்லூரி வளாகங்களில் ஏற்படுத்தப்பட்டு நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் ஏற்கனவே இருந்த 524 படுக்கைகளுடன் கூடுதலாக 230 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் 910 கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளும் உள்ளன. இந்நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் வரும் நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க கூடுதலாக 250 ஆக்சிஜன் படுக்கைகள் அங்குள்ள ஆடிட்டோரியம் மற்றும் அதன் அருகில் உள்ள மைதானத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடந்தது. வார்டுகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் திறந்து வைத்தனர்.

தொடர்ந்து அவர்கள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கலெக்டர் (பொறுப்பு) பார்த்தீபன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து அமைச்சர்கள் சுப்பிரமணியன், காந்தி ஆகியோர் கணியம்பாடி தனியார் திருமண மண்டபத்தில் நடந்து வரும் கொரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்தனர். இதையடுத்து புரம் நாராயணி மருத்துவமனையில் புதிய மருத்துவக்கருவிகளின் செயல்பாடுகளை தொடங்கி வைத்து, முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்ட நடைமுறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

Tags : Valor Government Hospital , 250 Oxygen Extra Bed Ward Opening at Vellore Government Medical College Hospital
× RELATED ராஜினாமாவை திரும்பப் பெற்றார் ஐஏஎஸ் அதிகாரி அனீஷ் சேகர்!