×

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ல் தண்ணீர் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால், சில ஆண்டுகளாக மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைவாக இருப்பதாக கூறி தண்ணீர் திறந்து விடுவதில்லை. இதனால், குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலை இருந்தது. இந்த நிலையில் நடப்பாண்டில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து கடைமடை வரை தங்கு தடையின்றி செல்ல வசதியாக காவிரி ஆறு, கால்வாய், வடிகால்வாய் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். இதையேற்று காவிரியில் தூர்வாரும் பணி மேற்கொள்ள ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தூர்வாரும் பணிகள் 4061 கி.மீ நீளத்தில் நடந்து வருகிறது.

இதை கவனிக்க தமிழக அரசு சார்பில் 8 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பணிகளை 10 நாட்களுக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேட்டூர் அணையின் நீர்மட்ட அளவு, ஜூன் 3ம் தேதி (நேற்றைய) நிலவரப்படி 97.13 அடியாகவும், நீர் இருப்பு 61.43 டிஎம்சி ஆகவும் உள்ளது. நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாலும், காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 முதல் பாசனத்திற்காக திறந்துவிடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதனால், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டங்களில் சுமார் 5.21 லட்சம் ஏக்கர் (2.11 லட்சம் ஹெக்டேர்) நிலங்கள் பாசன வசதிபெறும். மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிக்கும் முழுமையாக சென்று சேரும் வகையில் தூர்வாரும் பணிகளை  விவசாயிகளை கலந்தாலோசித்து இந்தாண்டு முறையாக மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி, டெல்டா மாவட்டங்களில் ரூ.65.11 கோடி செலவில் 647 பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதன் மூலம், அனைத்து பகுதி டெல்டா பாசன விவசாயிகளுக்கும் தேவையான அளவு தண்ணீர் கொண்டு சேர்க்க இயலும். இந்தாண்டு விவசாயப் பணிகளுக்குத் தேவையான விதை நெல், உரங்கள், பூச்சி மருந்து மற்றும் இதர வேளாண் இடுபொருட்கள் போதுமான அளவு இருப்பில் வைக்கவும் வேளாண் துறை மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Mettur Dam ,Cauvery Delta ,Chief Minister ,MK Stalin , Opening of water from Mettur Dam on June 12 for irrigation of Cauvery Delta: Order of Chief Minister MK Stalin
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு...