பஸ் பெயரில் குழப்பம் தீர்கிறது கேஎஸ்ஆர்டிசி பெயர் கேரளாவுக்கே சொந்தம்: கர்நாடகா இனி பயன்படுத்த முடியாது

திருவனந்தபுரம்: ‘கேஎஸ்ஆர்டிசி என்ற பெயரை இனிமேல் கேரள அரசு போக்குவரத்து கழகம்தான் பயன்படுத்த வேண்டும்,’ என்று கர்நாடகாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் வணிக முத்திரை பதிவு துறை உத்தரவிட்டுள்ளது. கேரள அரசின், ‘கேரளா ஸ்டேட் ரோடு டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன்,’ என்ற பெயர் ‘கேஎஸ்ஆர்டிசி’ என்ற சுருக்கமாக அழைக்கப்படுகிறது. அனைத்து கேரள அரசு பஸ்களிலும் இந்த எழுத்துகள்தான் குறிக்கப்பட்டு உள்ளது. ஆனால், கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழக பஸ்களிலும் இதே எழுத்துகள்தான் பொறிக்கப்பட்டுள்ளது. இதனால், குழப்பம் ஏற்பட்டு வந்தது.

இதற்கிடையே, கடந்த 2014ம் ஆண்டு, ‘கேஎஸ்ஆர்டிசி’ என்ற பெயர் தங்களுக்குதான் சொந்தம். எனவே, கேரள அரசு பஸ்களில் இந்த எழுத்துகளை பயன்படுத்தக் கூடாது,’ என்று கர்நாடக அரசு கேரளாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதனால், கேரள போக்குவரத்து கழகத்தின் அப்போதைய நிர்வாக இயக்குனர் ஆன்டனி சாக்கோ, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் வணிக முத்திரை பதிவு துறையில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 7 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், ‘கேஎஸ்ஆர்டிசி என்ற எழுத்தை கேரள போக்குவரத்து கழகம்தான் பயன்படுத்த வேண்டும்,’ என்று உத்தரவிடப்பட்டது. இதனல், இனிமேல் கர்நாடக போக்குவரத்து கழகம் ‘கேஎஸ்ஆர்டிசி’ என்ற எழுத்தை பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>