கல்வி கட்டணம் செலுத்தவில்லை எனக்கூறி ஆன்லைன் வகுப்பிலிருந்து 13 மாணவிகள் நீக்கம்: திண்டுக்கல் சிபிஎஸ்இ பள்ளி நடவடிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கல்வி கட்டணம் செலுத்தவில்லை எனக்கூறி ஆன்லைன் வகுப்பில் இருந்து 13 மாணவிகள் நீக்கப்பட்டதால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திண்டுக்கல், நத்தம் சாலையில் பொன்னகரத்தில் சிபிஎஸ்இ தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு முதல் கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளி மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. கடந்த கல்வி ஆண்டு முடிந்த நிலையில் 2021- 2022ம் கல்வியாண்டுக்கான ஆன்லைன் வகுப்புகள் நேற்று முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. மேலும் பெற்றோர்கள் உடனடியாக முதல் பருவத்திற்கான முழு கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டும் என நிர்வாகம் கூறியிருந்தது. இதில் 5ம் வகுப்புக்கு முதல் பருவத்திற்கான ரூ.27 ஆயிரத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என பள்ளி நிர்வாகம் சார்பில் எஸ்.எம்.எஸ் அனுப்பி உள்ளனர்.

ஊரடங்கு அமலில் உள்ளதால் உடனடியாக கல்வி கட்டணத்தை செலுத்த முடியாது; கால அவகாசம் வழங்க வேண்டும் என சில பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகம் கல்வி கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறி 5ம் வகுப்பு படிக்கும் 13 மாணவிகளை ஆன்லைன் வகுப்பில் இருந்து திடீரென நீக்கி உள்ளது. இதேபோல் 1 முதல் 12ம் வகுப்பு வரை கல்வி கட்டணம் கட்டாத ஏராளமான மாணவ, மாணவிகள் ஆன்லைன் வகுப்பில் அனுமதிக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் பள்ளி செயல்படாத நிலையில் பஸ், விளையாட்டு, உணவு ஆகிவற்றிற்கும் கட்டணம் சேர்த்தே வசூலிப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். எனவே தமிழக அரசு, பள்ளிக் கல்வித்துறை சார்பில் அந்த பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   

Related Stories:

>