×

சிபிஎஸ்இ தேர்வு ரத்து பற்றி 12ம் வகுப்பு மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்: நேரத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த அறிவுரை

புதுடெல்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுடன் பிரதமர் மோடி காணொலி வழியே உரையாடினார். பள்ளி இறுதித்தேர்வு எழுதும் மாணவர்களுடன் ஆண்டுதோறும் பிரதமர் மோடி உரையாடி வருகிறார். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தைரியம் அளிக்கும் விதமாக ‘பரிக்‌ஷா பே சார்ச்சா’ என்ற பெயரில் இது நடந்து வருகிறது. மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்யும் இந்நிகழ்ச்சி, கொரோனா தொற்று காரணமாக கடந்தாண்டு காணொலி மூலமாக நடைபெற்றது. நடப்பு ஆண்டில் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ரத்து செய்யப்படுவதாக கடந்த செவ்வாய்க் கிழமை பிரதமர் மோடி அறிவித்தார்.

அதனால், இந்த ஆண்டு பிரதமருடனான உரையாடல் இருக்காது என்று பலரும் எண்ணிதனர். ஆனால், எதிர்பாராத விதமாக சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களுடன் மோடி நேற்று காணொலி மூலமாக உரையாடினார். தேர்வு ரத்து செய்யப்பட்டதாக செய்தி வெளியானபோது உங்களின் உணர்வுகள் எப்படியிருந்தது? அடுத்து என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்? என்பது போன்ற பல கேள்விகளை இந்த உரையாடலின் மோடி மாணவர்களிடம் மோடி கேட்டார். இதில், தேர்வு ரத்தானதால் மன அழுத்தத்தில் இருந்து விடுதலை பெற்றதாக மாணவர்களும், பெற்றோர்களும் நன்றி கூறினர். பெற்றோர்கள் கல்லூரியில் சேர்வது தொடர்பாக மோடியிடம் சில சந்தேகங்களை கேட்டனர்.  உரையாடலின் இறுதியில், ‘கிடைத்திருக்கும் இந்த நேரத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துங்கள், உடல்நலனைப் பாதுகாப்பதை முக்கிய மந்திரமாகக் கொள்ளுங்கள்’ என்று பிரதமர் அறிவுரை வழங்கினார்.


Tags : PM Modi ,CPSE , PM Modi discusses CBSE cancellation with Class 12 students: Advice to use time creatively
× RELATED நாட்டின் முன்னணி ஆன்லைன் கேமர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!!